ஜெர்மனி உதவி
போர் மேகம் சூழ்ந்துள்ள இஸ்ரேலுக்கு ராணுவ மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐரோப்பிய நாடான ஜெர்மன் முன்வந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறுகையில், ”இந்த சமயத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் நிற்கிறோம். அவர்கள் கேட்டுகொண்டபடி, இரண்டு ஆளில்லா குட்டி விமானங்கள் வழங்கப்படும். வெடி பொருட்கள், கப்பல்கள் போன்றவையும் தேவை என்பதை அறிகிறோம். மருத்துவ உதவியும் வழங்கத் தயாராக உள்ளோம். இதைப்பற்றி அந்நாட்டுடன் விவாதிக்க உள்ளோம்,” என்றார்.
‘பேச்சுவார்த்தை தேவை’
இஸ்ரேல் – ஹமாஸ் போராளிகள் இடையிலான போர் குறித்து நம் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல், ஒரு பயங்கரவாத செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையே உள்ள பகையை முடிவுக்கு கொண்டு வர பேச்சு நடத்துவதே நிரந்தர தீர்வு. இஸ்ரேலுடன் சமாதானமாக, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் வாழும் பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான அரசை நிறுவுவதற்கான நேரடி பேச்சை மீண்டும் துவங்க இந்தியா எப்போதும் பரிந்துரைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ், அலெப்போ ஆகிய இரண்டு விமான நிலையங்கள் கடுமையாக சேதமடைந்தன. இஸ்ரேல் படையினரின் தொடர் ஏவுகணை தாக்குதலால் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் சேதமடைந்தன. இதையடுத்து, விமான போக்குவரத்து இங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை சிரியா அரசு உறுதி செய்துள்ளது.
நெதன்யாகு – பிளிங்கன் சந்திப்பு
பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கைக்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இஸ்ரேலுக்கு நாங்கள் துணையாக இருப்போம். ஹமாஸ் அமைப்பினர் ஒழிக்கப்பட வேண்டும். அமெரிக்க ராணுவ கப்பல்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு வந்துவிட்டன,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement