புதுடில்லி,’பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண் குழந்தைகள், கல்வியை தொடரவும், சிறப்பான வாழ்க்கை வாழவும் உதவும் வகையில், அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என, அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
ராஜஸ்தானில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான ஆயுள் தண்டனை, 12 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது:
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பயத்தில் இருந்து மீண்டு வர, அந்தக் கொடூர நிகழ்வில் இருந்து மீண்டு வர, குழந்தை நல ஆலோசகர் அல்லது குழந்தை மனநல மருத்துவர் வாயிலாக உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்க வேண்டும்.
தங்களுடைய படிப்பைத் தொடரவும், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும், அந்த குழந்தைகளுக்கு இந்த மனநல ஆலோசனைகள் வழங்குவதை, மாநில அரசுகளும், மாநில சட்ட சேவை ஆணையங்களும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
பாலியல் வன்முறைகளுக்கு ஆளான பெண் குழந்தைகளுக்கு உரிய நிவாரண நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வெறும் பணத்தால் மட்டும் அவர்களது வலி குறையாது. அதனால், குழந்தைகள் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும், ‘பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளை மேம்படுத்துவோம்’ என்ற திட்டத்தில் இதுவும் இடம்பெற வேண்டும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை ராஜஸ்தான் மாநில சட்ட சேவை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எந்த சலுகையும் இல்லாமல், ௧௪ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாதியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவரின் ஜாதி, மதம் பெயரை குறிப்பிடக் கூடாது. இந்தக் குற்றங்களை, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்