மக்கள் அதிக நம்பிக்கை வைக்கும் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு… சரியானதா..? | #விகடன் சர்வே!

எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடுதல் அவசியம். அதற்கான சேமிப்பும், முதலீடும் இல்லையென்றால் வாழ்வை நகர்த்துவது சிரமமாகி விடுகிறது. அந்தவகையில் தங்கம், வீடு, மியூச்சுவல் ஃபண்ட் எனப் பலரும் தங்களது விருப்பத்திற்கேற்ப முதலீடு செய்து வருகின்றனர். 

இதனை மையமாக வைத்து விகடனில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் `உங்களுக்கு எந்த முதலீட்டின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது?

*பங்குச்சந்தை 

*தங்கம்/தங்கம் சார்ந்த முதலீடுகள்

*வீடு மற்றும் வீட்டு மனை

*மியூச்சுவல் ஃபண்ட்’ 

எனக் கேட்டிருந்தோம். 

இந்த கேள்விக்கு மொத்தம் 2,700 பேர் வாக்களித்து இருந்தனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `பங்குச்சந்தை’ என 25 சதவிகிதத்தினரும், `தங்கம்/ தங்கம் சார்ந்த முதலீடுகள்’ என 34 சதவிகிதத்தினரும், `வீடு மற்றும் வீட்டு மனை’ என 27 சதவிகிதத்தினரும், `மியூச்சுவல் ஃபண்ட்’ என 15 சதவிகிதத்தினரும் பதிலளித்தனர்.

பெரும்பாலான மக்களின் கருத்து, தங்கம் சார்ந்த முதலீடுகள் என்பதாகவே இருந்தது.

மக்கள் இன்னும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளைத்தான் அதிகம் நம்புகிறார்கள். மக்களின் இந்த மனநிலையைக் குறித்து கேட்டபோது, குடும்ப நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன் கூறுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் பாரம்பர்ய சொத்துக்களாக கருதப்படுகிறது. என்னதான் மியூச்சுவல் ஃபண்ட் வந்தாலுமே, நம்முடைய கண்களால் கண்டு தொட்டுப் பார்த்து உணரக்கூடிய சொத்துகள் (Tangible assets) மீது இயல்பாகவே நம்பிக்கை அதிகமாகிறது. அப்படித்தான் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது.

இந்தியாவில் இருக்கும் கோடிக் கணக்கான குடும்பங்கள் வருடம் தோறும் வறுமையில் இருந்து மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும், மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் முன்னேறுகிறார்கள். 

லலிதா ஜெயபாலன்

அந்தவகையில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெரும்பான்மையானவர்களின் முதல் கனவு என்பது சொந்த வீடு வாங்குவதாகவே இருக்கிறது. ரியல் எஸ்டேட்டை பொறுத்தமட்டில் இதுதான் முதல் இன்வெஸ்ட்மென்ட். 

வீடு வாங்கிய பின் உடனே இன்னொரு வீடு வாங்க முடியாது. அதற்கு பெரிய தொகை தேவைப்படும். இதற்கிடையில் மேற்கொள்ளப்படும் சிறிய முதலீடுகள் தங்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆண்கள் இல்லையென்றாலும், பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள்.

ஏனெனில் ஒரு காரை இப்போது வாங்க வேண்டும் என்றாலும் கூட 10 முதல் 15 லட்சம் என பட்ஜெட் பெரிதாகி விட்டது. அப்படியெனில் சிறிய தொகை என்றாலும் தங்கம் சிறந்த முதலீடாக இருக்கும் என நினைக்கிறார்கள். 

அதோடு தங்கத்தை ஆபத்து காலங்களில் உதவியாகவும் பார்க்கிறார்கள். பணம் தேவைப்படும் நேரங்களில் கடன் வாங்காமல் என்னுடைய தங்கத்தையே வைத்து லோன் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் 

அதுமட்டுமில்லாமல் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் அப்படியில்லை தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வுகளோடு தான் இருக்கும்.

தங்கம் `நெகட்டிவ் ரிடர்ன்ஸ்’ கொடுத்த வருடங்களும் உண்டு. ஆனால் நமக்கு தான் தங்கத்தின் விலை குறைவதாகத் தெரிவதில்லை. ஏனென்றால் இந்திய ரூபாய் VS அமெரிக்க டாலரை எடுத்துக் கொண்டால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. 

இந்திய ரூபாய் மதிப்பு

அதனால் சர்வதேச சந்தையில் தங்கம் மதிப்பை இழந்தாலும், ரூபாயும் அதன் மதிப்பை இழப்பதால் தங்கத்தை பாசிட்டிவ் ரிடர்ன்ஸாக இந்தியாவில் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.  

அதனால் போன வருடம் வாங்கிய தங்கத்திற்கும், இந்த வருடம் வாங்கிய தங்கத்திற்கும் விலை அதிகரித்துள்ளதே என நினைக்கலாம், ஆனால் அது எப்போதும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சில நேரங்களில் நான்கைந்து வருடங்கள் கூட தங்கத்தின் விலையில் மாற்றமே இல்லாமல் இருந்திருக்கிறது. 

கடந்த மூன்று வருடங்களில் கோவிட் நோய்த் தொற்று காரணமாக வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலையும் போர் காரணங்களால் உயர்ந்திருக்கிறது.   

இதனாலேயே மக்களின் மனதில் எப்போதும் தங்கத்தைச் சேமிப்பாக நினைக்கிறார்கள்.” என்றார்.

முதலீட்டை தாண்டி வாங்கும் சம்பளத்தில் செலவுகள் போக மீதம் கைகளில் எவ்வளவு நிற்கிறது?… கமெண்டில் சொல்லுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.