மூன்று பிள்ளைகளின் தொடர் மரணம்… இழப்பை மறக்க 1,609 கி.மீ சைக்கிள் பயணம் செய்த அம்மா!

`இதற்கு மாற்று இது’ என்பதெல்லாம் பொருள்களுக்கு மட்டும் தான்… மனிதர்களுக்கு இல்லை.

வாழ்வின் மீள முடியாத துயரங்களில் ஒன்று நெருக்கமானவர்களின் இறப்பு. வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல அந்தப் பிரிவிலிருந்து மனதை வேறு திசைக்குத் திருப்பித் தான் ஆக வேண்டும்.

மேவிஸ் பேட்டர்சன்

அந்த வகையில் நெருக்கமானவர்களின் இறப்பை மறக்கப் பல முயற்சிகளைச் செய்திருப்போம். அப்படி தன்னுடைய பிள்ளைகளின் இறப்பையும் அது கொடுக்கும் வலியையும் மறக்க, வயதான பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஸ்காட்லாந்தின் காலோவே பகுதியைச் சேர்ந்த 85 வயதான பெண் மேவிஸ் பேட்டர்சன். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர். 2012-ல் மாரடைப்பின் காரணமாக இவரின் மகன் சாண்டி உயிரிழந்தார். 2013-ல் நிமோனியா பாதிப்பால் அவரின் மகள் கேட்டி இறந்தார். 2016-ல் ஒரு விபத்தில் மற்றொரு மகன் பாப் உயிரிழந்தார்.

சில வருடங்களுக்குள்ளாகவே தன் பிள்ளைகள் அனைவரும் அவரை விட்டுச் சென்றதை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதோடு அவர்கள் இறக்கும் போது 40 வயதில் இருந்துள்ளனர்.

இவர்களின் இழப்பில் இருந்து மீள, சைக்கிள் ஓட்டுகிறார். இதற்காக அதிகாலையில் எழுந்து ஸ்காட்லாந்தின் சுற்றளவில் தினமும் 80 கிமீ பயணம் செய்கிறார். 85 வயதில் தினமும் 80 கிமீ பயணம் என்பது மிகப்பெரிய சவால்.

கடினமான இந்தச் சவாலிலும் பிரிட்டிஷின் மேக்மில்லன் புற்றுநோய் தொண்டு நிறுவனத்துக்கு ஆதரவுக்காக பணம் திரட்டினார்.

மேவிஸ் பேட்டர்சன்

கடினமான பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் உடல் வலிகள், அவரது இதயத்தின் வலிகளை மறக்கச் செய்வதாக நினைக்கிறார். தற்போது மேவிஸ் பேட்டர்சன் மூன்று பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

சமீபத்தில் ஸ்காட்லாந்து முழுவதும் 1,609 கிமீ சைக்கிள் ஓட்டி முடித்தார். அப்போது சக சைக்கிள் சாகச வீரர்கள் மற்றும் பயணிகள் வழிநெடுக நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் 1,609 கிமீ தூரத்தை முடிக்கவிருந்தபோது, அவரை உற்சாகப்படுத்த ஒரு கூட்டமே அங்கு கூடியிருந்தது. 

இது குறித்துப் பேசியுள்ள மேவிஸ் பேட்டர்சன், “நான் அவர்களை பற்றி நிறைய யோசிக்கிறேன். ஆனால் நான் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். அதனால் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் சவால்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் கடைசியாகச் செய்த சைக்கிள் பயணம் அற்புதமாக இருந்தது. ஏனென்றால் அது குழந்தைகளிடமிருந்து என் மனதை விலக்கியது’’ என்று கூறியுள்ளார். 

வலியையோ, இழப்பையோ மறக்க நீங்கள் முயற்சி செய்த விஷயங்கள் என்ன?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.