2022-க்கான 'சரஸ்வதி சம்மான்' விருதை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொண்டார்!

புதுடெல்லி: 2022-ம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொண்டார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அவருக்கு விருதை வழங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு எழுதிய ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு சரஸ்வதி சம்மான் இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை கடந்த 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

இந்த விருது ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. கடந்த 10 ஆண்டு காலத்தில் எழுத்தாளரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதுக்கு தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1942-ல் பிறந்தவர் சிவசங்கரி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார். 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 சிறுகதைகள், ஐந்து பயணக் கட்டுரைகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தமிழ் சிறுகதைகளின் இரண்டு தொகுப்புகளை தொகுத்துள்ளார். இவரது பல படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம் உட்பட சில உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“நான் 56 வருடங்களாக எழுத்தாளராக இயங்கி வருகிறேன். நல்ல இலக்கிய படைப்பு எது என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். நல்ல இலக்கியம் என்பது காலத்தின் தடைகளைத் தாண்டி வாசகரிடம் தாக்கத்தை உருவாக்கி, ஆக்கப்பூர்வமாக சிந்திக்கத் தூண்டும். இலக்கியம் கண்ணாடியை போன்றது. அது நமக்கு சுட்டிக்காட்டும் குறைகளைத் திருத்திக் கொள்கிறோம்” என்று விருதை பெற்றுக்கொண்ட சிவசங்கரி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.