பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் – இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான போர் உக்கிரமடைந்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதால் தீக்கிரையாகியிருக்கிறது. எங்கும் மரண ஓலங்கள், ஏவுகணைகளால் தகர்க்கப்பட்ட கட்டடங்கள், சாலைகளில் சிதறிக்கிடக்கும் சடலங்கள், மின் இணைப்பு துண்டிப்பு, மருத்துவம், உணவு, தண்ணீர் வசதிகள் இல்லாமல் மக்கள் மரணத்தின் பிடியில் இருந்துவருகின்றனர். சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பகுதிகளைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என பாலஸ்தீனம் அழைப்பு விடுத்திருக்கிறது. அதேநேரம், `பாலஸ்தீனத்தில் நாங்கள் மனிதர்களுடன் போரிடவில்லை; மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறுதான் எங்களின் செயல்படுகள் இருக்கும்’ என தனது தாக்குதலை முடுக்கிவிட்டிருக்கிறது இஸ்ரேல்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன. குறிப்பாக, பாலஸ்தீனத்துக்கு சீனா, இரான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், கத்தார், தென்னாப்பிரிக்கா, லெபனான் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, உக்ரைன், பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன.
குறிப்பாக, போர் தொடங்கியபோதே இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவே இருக்கின்றன. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்!” என்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, “தற்போதைய நிலை குறித்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நன்றி. கடினமான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது!” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தொடக்கத்தில் பாலஸ்தீனத்துக்கு… இப்போது இஸ்ரேலுக்கு – மாறிய இந்தியாவின் நிலைப்பாடு:
இந்திய சுதந்திரக் காலம் தொட்டே, இந்தியாவின் ஆதரவு என்பது பாலஸ்தீனத்துக்குதான் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. குறிப்பாக, 1948-ல் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த நாடு இந்தியா. அதேபோல, முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தி என அனைத்து இந்தியப் பிரதமர்களும் பாலஸ்தீனத்தையே ஆதரித்துவந்தனர். 1981-ம் ஆண்டு `Solidarity with the Palestine people’ என்ற வாசகத்துடன் இந்திய – பாலஸ்தீன கொடிகள் மற்றும் மக்கள் இடம்பெற்றிருக்கும் தபால் தலையையும் இந்தியா வெளியிட்டு பாலஸ்தீனுக்கு தனது தார்மீக ஆதரவை இந்தியா வழங்கியது. தற்போதைய போர் சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை பாலஸ்தீனத்துக்கு வழங்கியிருக்கிறது.

பா.ஜ.க – மோடிக்குப் பிறகு ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்:
ஆனால், 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றிபெற்று பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இஸ்ரேல் – பாலஸ்தீன நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றிருக்காத நிலையில், 2017-ம் ஆண்டு முதன்முறையாக அந்த நாட்டுக்குச் சென்று பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் மோடி. இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்ற பெயரையும் பெற்றார். அதேபோல, தற்போதைய போர்ச் சூழலிலும் இஸ்ரேலுக்கே தனது முழு ஆதரவையும் அளித்திருக்கிறார்.
இஸ்ரேலை பா.ஜ.க-மோடி அரசு ஆதரிக்க காரணம் என்ன?
`கேபிடலிஸம் – கம்யூனிசம், வலதுசாரி – இடதுசாரி, அமெரிக்கா – ரஷ்யா’ என உலக நாடுகள் இரண்டு தரப்பாக அணிவகுத்தபோதே இந்தியா `அணி சேராக் கொள்கையுடன்’ இரண்டு தரப்புக்கும் இல்லாமல் நடுநிலை வகித்தது. இரண்டு தரப்பு நாடுகளிடமும் நட்புறவைப் பேணி வந்தது. அனைத்து சூழலிலும் மதசார்பற்ற ஜனநாயக நாடாகத் தன்னை இருத்திக்கொள்வதிலேயே குறியாக இருந்துவந்தது. இந்த நிலையில், 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டில் சிறிது மாற்றங்கள் தென்படத் தொடங்கின.
ஆசியப் பெருங்கண்டத்தில் ஓங்கிவரும் சீனாவின் அபரிவிதமான அதிகார மற்றும் பொருளாதார வளர்ச்சி இந்தியாவுக்கும் அமெரிக்க மேற்குலக நாடுகளுக்கும் சவாலாக அமைந்தன. ஆசிய கண்டத்தையும் தாண்டி, ஆப்ரிக்க – ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது பட்டுப்பாதை கனவை சீனா விரிவுபடுத்தி செல்வதும் பெரும் தலைவலியாக அமைந்துவந்தன. அதேநேரம், சீனா தொடர்ச்சியாக இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் அத்துமீறி நுழைவது, ஆக்கிரமிப்பு – கட்டுமானங்களை மேற்கொள்வது, இந்திய ராணுவத்தினரோடு மோதலில் ஈடுபடுவது என தனது சித்துவேலைகளை அதிகரித்தபடி சென்றது.

அந்தநிலையில்தான், ரஷ்யாவுக்குப் பிறகு சீனாவின் பொது எதிரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்தது. பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக AUKUS எனும் கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன், அஸ்திரேலியா நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் ஏற்படுத்திக்கொண்டது. பா.ஜ.க ஆட்சியின்போதும் இந்தியா நடுநிலையான நாடாக இருந்துவருகிறது என்றாலும்கூட, மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு சூழல்களில் அமெரிக்கா சார்பு நிலைப்பாட்டையே எடுத்துவருகிறது. அதற்கேற்ப, அமெரிக்கா தோள் கொடுக்கும் இஸ்ரேல் நாட்டுடனும் இந்தியா தனது உறவை மேம்படுத்தி வருகிறது. தற்போதைய போர் சூழலில் சீனா பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறது. ரஷ்யாவும் இந்தப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கத் தலையீட்டை குறிப்பிட்டு மூன்றாவது நாடு நுழைகிறது என எச்சரித்திருக்கிறது. வழக்கம்போல அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. இந்தியாவும் வழக்கமானத் தனது `நடுநிலை, சமாதானம், போர்நிறுத்தம்’ என்ற வார்த்தைகளைவிட்டு `இஸ்ரேலுக்கே தனது ஆதரவு’ என வெளிப்படையாகப் பேசியிருக்கிறது.

உலக அரசியல் சூழல் மட்டுமல்லாமல் இஸ்ரேலுடன் ஒத்துப்போகும் சிந்தாந்தம், வரலாற்று ரீதியிலான தொடர்புகள் போன்ற பிற காரணங்களும் இஸ்ரேலை பா.ஜ.க தலைமையிலான இந்தியா ஆதரிப்பதற்கு காரணம் என விமர்சிக்கிறார்கள் எதிர்கட்சியினர். குறிப்பாக, “சீயோனிசம்’ என்ற இன – மதத் தூய்மைவாதத்தை இஸ்ரேல் கடைபிடிக்கிறது. அதேபோல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவும் `இந்துத்துவம்’ என்ற தூய்மைவாதத்தையே விரும்புகிறது. `இஸ்ரேல் யூதர்களுக்கு மட்டுமேயான தேசம்’ என்ற நோக்குடன் அந்த பிரதேசத்தில் வாழும் அரேபிய-இஸ்லாமிய சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது; அதேபோல, பா.ஜ.க ஆட்சியிலான இந்தியாவிலும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக குடியுரிமை திருத்தச்சட்டம், மதமாற்ற தடைசட்டம், முத்தலாக், பீஃப், ஹிஜாப், புல்டோசர் மாடல் அரசு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அதாவது இஸ்லாமிய எதிர்ப்பு என்ற புள்ளியில் பா.ஜ.க தலைமையிலான இந்திய அரசாங்கம் இஸ்ரேலை ஆதரிக்கிறது” என குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக ஜே.என்.யு பேராசிரியர் ஏ.கே.பாஷா, “இஸ்ரேல் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது. பா.ஜ.கவும் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் அரசியலைச் செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க ஆதரவாளர்கள் இஸ்ரேலை விரும்புகின்றனர். இந்தியாவில் இஸ்ரேலுக்கு ஆதரவு என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வால்தான் ஏற்படுகிறது!” என பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் `காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்துக்கு ஆதரவு எனும் பேரில் தீவிரவாதத்துக்கு துணைபோகிறது’ என பா.ஜ.க தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.