யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சான்யா ஐயப்பன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘இறுகப்பற்று’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விதார்த் எமோஷனலாக பேசியிருக்கிறார். “பத்திரிகையாளர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு சரியாக 13 வருடம் ஆகிவிட்டது. ‘மைனா’ ரிலீஸ் ஆகி சக்ஸஸ் ஆனபோது இங்கு வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தோம். ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அந்த படத்தின் தயாரிப்பாளர்களே வந்து படம் நன்றாக இருக்கிறது, வெற்றி அடைந்திருக்கிறது, ரொம்ப சந்தோஷம் எனச் சொல்வார்கள் என்று நிறைய படத்திற்கு நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நல்ல படங்களில் நடித்திருந்தாலும் அவை பெருவாரியான மக்களிடம் போய் சேரவில்லை. இன்றைக்கு இப்படி ஒரு வெற்றியடைந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். அதை எங்கள் தயாரிப்பாளரே இந்த இடத்தில் வந்து சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதியான ஒரு எதிர்பார்த்துதான் எனக்கு 13 வருடங்களாக இருந்தது. இன்றைக்கு அது நிறைவேறிருக்கிறது. இதுமாதிரியான படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.
சமூக வலைதளங்களில் மக்களின் நேர்மறையான விமர்சனங்களைப் பார்க்கும்போது நெகிழ்வாக இருந்தது. இந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.