ஆமதாபாத்: உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியா -பாகிஸ்தான் மோதல் ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒருநாள் உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இன்றும் இது தொடர வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித்துடன் இணைந்து துவக்கம் தர, டெங்கு பாதிப்பில் இருந்து மீண்ட சுப்மன் கில் காத்திருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் ஷகீன் பந்துகளில் பவுண்டரிகளாக வீசிய சுப்மன், மீண்டும் தனது பணியை சரியாகச் செய்யலாம்.
‘மிடில் ஆர்டரில்’ கோஹ்லி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் கூட்டணி மிரட்டலாம். பாகிஸ்தான் அணியில் உலக தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது இந்தியாவுக்கு சாதகம்.
பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் கூட்டணி ‘வேகத்தில்’ உதவ காத்திருக்கிறது. சிராஜ் முதல் இரு போட்டியில் 1 விக்கெட் தான் வீழ்த்தினார். இவருக்குப் பதில், ஆமதாபாத் மைதானத்தில் அசத்தும் முகமது ஷமி களமிறக்கப்படலாம். ‘சுழலில்’ குல்தீப் கைகொடுக்க உள்ளார், இவருடன் சேர்ந்து ரவிந்திர ஜடேஜாவும் ‘ஆல் ரவுண்டர்’ திறமையை வெளிப்படுத்த உள்ளார்.
ஆடுகளம் எப்படி
ஆமதாபாத் மோடி மைதானம் உலகின் பெரியது. 1,32,000 இருக்கைகள் உள்ளன.
ஆமதாபாத் ஆடுகளம் மதியம் சுழலுக்கு கைகொடுக்கும். ‘டாஸ்’ வெல்லும் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்யலாம்.
மழை வருமா
ஆமதாபாத்தில் இன்று வானம் தெளிவாக காணப்படும். போட்டி நேரத்தில் மேகமூட்டம் ஏற்பட்டாலும், மழை வர அதிகபட்சம் 6 சதவீதம் தான் வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement