‘போட்டா போட்டி’ வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் ‘இறுகப்பற்று’.
இப்படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, `மாநகரம்’ ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சான்யா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் யுவராஜ், விக்ரம் பிரபு, விதார்த், அபர்ணதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அபர்ணதி, “ இந்த படத்தில் நடித்ததற்கு நானே எனக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்து வரவேற்பு கொடுத்த ஆடியன்ஸுக்கு நன்றி. வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும். அந்த மாதிரி எனக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு. நான் இந்த சினிமாவிற்குள் வருவதற்கு முன்னாடி என் அப்பாவின் நண்பரின் மகன் ‘ நீயெல்லாம் சினிமாவுக்கு போய் என்ன பண்ணப்போற’ என்று கேட்டார்.
இன்றைக்கு துபாயில் படம் வெளியாகி இருக்கிறது. ‘இறுகப்பற்று’ படத்தை பார்க்க 7 மணி காட்சிக்கு அவர் போகிறார். இப்படி ஒரு தருணத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி. நான் நிறைய நேர்காணலில்கூட சொல்லியிருக்கிறேன். இதற்கு முன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எதுவும் முழுமை கொடுக்கவில்லை. இப்போதுதான் சினிமாவில் முழு வெற்றியைப் பார்க்கிறேன்.

இதுபோன்ற ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இப்படத்தின் எடிட்டர், இசையமைப்பாளருக்கு மிக்க நன்றி. விதார்த் ‘மைனா’ படத்துக்கு இணையான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். விக்ரம் பிரபு, ஸ்ரீ என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. அழகான படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.