பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் கலந்துரையாடல்

புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று (அக். 11) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.

மனித உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பது, அவசரகாலச் சூழ்நிலைகளின் போது மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றிப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதன் போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

புறநகர் பகுதிகளில் மிகவும் பொருத்தமான மற்றும் தரமான மரங்கள் நடப்படுவதை உறுதி செய்யும் முறையான அமைப்பை தயார் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

குறுகிய கால தீர்வாக, விசேடமாக கொழும்பு மாநகரசபையின் அதிகார வரம்பில் எதிர்கால வேலைத்திட்டங்களை முறையான ஆய்வின் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர், இதற்காக சிவில் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவியைப் பெறவும், புறநகர்ப் பகுதிகளில் விழும் அபாயத்தில் உள்ள மரங்களை அடையாளம் காண சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுமாரும் அமைச்சர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், உள்ளுராட்சி அமைச்சு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய தாவரவியல் பூங்கா, வனவியல் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.