சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டவர்களுக்கு ‛இறுகப்பற்று' தான் பதில் : அபர்ணதி

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் 'இறுகப்பற்று'. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை உளவியல் ரீதியாக பேசிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் அபர்ணதி குண்டு பெண்ணாக நடித்திருந்தார். இதற்காக இரண்டு வருடங்கள் முயற்சி செய்து தனது எடையை ஏற்றி நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து முடிக்கும் வரை வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. பல வாய்ப்புகளும் கைவிட்டுப்போனது.

இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அபர்ணதி பேசும்போது, “இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி 'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்.

இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.