`போரின் கோர முகம் கொடூரமானது. யார் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ ஏதுமறியாத அப்பாவி பொதுமக்கள்தான். ஆனால், பாலஸ்தீனத்தின் ஹாமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுப்பதாகக்கூறி இஸ்ரேல் கையிலெடுத்திருக்கும் `போர் முறை’ இன்னும் கொடூரமானது; காஸாவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து, அதுவும் தடை செய்யப்பட்ட குண்டுகளால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது’ என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது பாலஸ்தீனம்.

வரலாற்றிலிருந்து ஒரு புரிதல்:
1881-ம் ஆண்டு முதல் தொடங்கிய யூதக் குடியேற்றம் தொடர்ந்து அதிகரிக்க, பாலஸ்தீனம் தனது நிலப்பரப்பை படிப்படியாக இழந்துகொண்டிருந்தது. 1948-ல் யூதர்கள் `இஸ்ரேல்’ என்ற தனிநாட்டை அறிவித்தனர். மொத்த நிலப்பரப்பில் 55% (யூதர்கள்)இஸ்ரேலுக்கும், 45% (அரேபியர்கள்) பாலஸ்தீனத்துக்கும் என பாகம் பிரிக்கப்பட்டு இரண்டானது. காலப்போக்கில் யூதர்களின் தொடர் குடியேற்றம் மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பு குறுகி `காஸா கரை மற்றும் மேற்கு கரை’ இரண்டு துண்டுகளாக உடைந்தது. இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்பட்ட அரேபிய – இஸ்லாமியர்கள் காஸா – மேற்கு கரைக்குள் சுருங்கினர். இதில் மேற்கு கரை நிலப்பரப்பு பாலஸ்தீன அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காஸா பகுதி ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய போராளி குழுவால் தன்னாட்சி செய்யப்பட்டு வருகிறது.
குறுகியப் பகுதியில் கூட்டமாக வாழும் காஸா மக்கள்:
பல காலமாக நீடித்து வரும் இந்த மோதலின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தாங்கள் வலிமையாக இருக்கும் காஸாவிலிருந்துகொண்டுதான் இந்த தாக்குதலை ஹமாஸ் துணிந்து நடத்தியது. ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் `ஹமாஸ் அமைப்பை இருந்த தடம் தெரியாமல் அழிப்போம்! ஒருவரைக்கூட விட்டுவைக்கமாட்டோம்’ எனக்கூறி கடந்த சில நாட்களாக காஸா பகுதி மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மின்சாரம், குடிநீர், உணவு என காஸா மக்களுக்கான அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைத்து தாக்குதலைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரையில் 500 குழந்தைகள், 276 பெண்கள் உள்பட 1,537 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 6,612 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும், 1.5 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கின்றனர். ஏற்கெனவே யூதக் குடியேற்றம் – இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் குறுகியிருக்கும் காஸா, உலகில் மக்கள் மிகவும் நெரிசலாக வசிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெறும் 362 ச.கி.மீட்டரில் தான் மிகவும் நெரிசலில் வசிக்கிறார்கள்.

இந்த நிலையில், காஸாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் காஸா மக்கள். இந்த தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த காஸா மக்கள், “காஸா பகுதியில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர்மீது தாக்குதல் தொடுப்பதாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம், சம்மந்தமே இல்லாமல் வடக்கு காஸாவில் உள்ள மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு எதிரானதாக மட்டுமே இல்லை; காஸா நிலத்திலிருந்து பாலஸ்தீன மக்களையும் வெளியேற்றி இந்தப் பகுதியையும் தங்களுடன்(இஸ்ரேலுடன்) இணைத்துக் கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது!” என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ்:
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவமான ஐ.டி.எஃப் (IDF), மக்கள் அடர்த்தி அதிகமிருக்கும் காஸா பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக பரபரப்பு குற்றாச்சாட்டை பாலஸ்தீனம் முன்வைத்திருக்கிறது. இதற்கு ஆதரமாக இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஏவும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காஸா மக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையான வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளின் மோசமான விளைவுகளைக் கருத்தில்கொண்டு இந்த குண்டுகளை போர்களில் பயன்படுத்த ஐ.நா மன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால், அதையும் மீறி இஸ்ரேல் குண்டுகளை ஏவுவதாக மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இஸ்ரேல் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது முதல்முறை அல்ல! ஏற்கெனவே 2009-ல் காஸா மீதான தாக்குதலின்போதும் இந்த பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியது. 2006-ல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தாக்குதலிலும் இதைப் பயன்படுத்தியது. தொடக்கத்தில் இதை மறுத்துவந்த இஸ்ரேல் பின்னர் சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் அழுத்தத்தால் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவால் போரில் தடைசெய்ய ஆயுதங்கள்:
இந்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மிகவும் ஆபத்தானவை. இது வெடித்தால் 1000 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பத்தையும் நெருப்பையும் உமிழும். சுமார் நூறு கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பரவும். இது மக்களுக்கு ஆழ்ந்த தீக்காயங்களை ஏற்படுத்தி சாவின் விளிம்புக்கு கொண்டுசெல்லும். எலும்பில் ஆழமாக ஊடுருவி உறுப்புச் சிதைவுகளை ஏற்படுத்தும். இந்த புகையை சுவாசிக்கும் குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழக்கும். புகையை சுவாசித்தவர்கள் அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் பின்னாட்களில் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும் என்கிறார்கள் சர்வதேச மருத்துவ வல்லுநர்கள்.

இந்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் போல வேறு பல கொடிய ஆயுதங்களையும் ஐ.நா. தடை பட்டியலில் சேர்த்திருக்கிறது. குறிப்பாக, 2009-ல் இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்து குண்டுகளும்(Cluster Bombs) ஐ.நாவால் தடை செய்யப்பட்டவைதான். இவைதவிர, இரசாயன ஆயுதங்கள்(Chemical Weapons), விஷ வாயுக்கள்(Poisonous Gas) உயிரியல் ஆயுதங்கள்(Biological Weapons), விஷம் கலந்த தோட்டாக்கள்(Poisoned Bullets), கண்டறிய முடியாதபடி துண்டாக்கும் ஆயுதங்கள் (Undetectable Fragmentation), விரிவடையும் எறிகணைகள் (Expanding Projectiles), கண்பார்வையை இழக்கச்செய்யும் லேசர்கள்(Lasers That Cause Blindness), கண்ணிவெடிகள்(Land Mines) உள்ளிட்ட பல்வேறு கொடூரமான ஆயுதங்களுக் போரில் பயன்படுத்த ஐ.நாவால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மீறி இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது போர்க்குற்றம். ஆனால், இதில் கொடுமை என்னவென்றால் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட இந்த ஆயுதங்களைப் போரில் பயன்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.