சென்னை: “கடந்த 70 ஆண்டுகளில் நாம் பெற்று தந்த உரிமைகள் மற்றும் நல்ல முயற்சிகளை சீரழிக்கின்ற வகையில் 9 ஆண்டுகால மோடி அரசின் நடவடிக்கைகள் இருப்பது மிகப்பெரிய துரதிஷ்டம்” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, “பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும், உள்ளூர் ஆட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். மிகப்பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்ட அத்திட்டம்தான் தற்போது மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தின் முன்னெடுப்பாக அமைந்தது.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியால் 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் கருத்து ஒற்றுமையை உருவாக்க முடியாத காரணத்தினால் நிறைவேற்றப்பட முடியாமல் போனது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெளிவே இல்லை. இண்டியா கூட்டணி வந்து தான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று எண்ணம் தோன்றுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் நாம் பெற்று தந்த உரிமைகள் மற்றும் நல்ல முயற்சிகளை சீரழிக்கின்ற வகையில் 9 ஆண்டுகால மோடி அரசின் நடவடிக்கைகள் இருப்பது மிகப்பெரிய துரதிஷ்டம். மோடி அரசு பெண்களுக்கு புதிய சுதந்திரத்தையும், உரிமையையும் அளிக்க தயாராக இல்லை. அனைத்து உரிமைகளையும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழித்து வருகின்றனர்” என்றார்.