மதுரை: அடுத்த 15 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு துறைகளில் அதிக வாய்ப்பு இருக்கும் என தியாகராசர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேசினார்.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிநாத ராஜா வரவேற்றார். கல்லூரி தலைவர், தாளாளர் ஹரி தியாகராசன் தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, உலகளவில் ‘டைம்ஸ் உயர் கல்வி’ நடத்திய ஆய்வில் இக்கல்லூரி 1201-ல் இருந்து 1500 இடையேயான தர நிலையை பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் இந்தியாவில் இருந்து வெகு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஐடி துறையில் வேலை வாய்ப்பு சற்று குறைந்தாலும், பிற துறைகளில் வேலை உள்ளது. இருப்பினும், உயர் கல்விக்கு செல்லவேண்டும், என்றார்.
விழாவில் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது: இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடு இந்தியா. அதிலும், அதிகம் படித்த இளைஞர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது. தனது பலம், பலவீனம் அறிந்து செயல்பட வேண்டும். இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப்பொருளும், கைப்பேசியும். இவ்விரண்டுக்கும் அடிமையாவதை தவிர்க்கவேண்டும்.
இந்தியாவில் இன்னும் 20 ஆண்டில் மட்டும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குகின்றன. 15 ஆண்டுக்கு செயற்கை நுண்ணுறிவு சார்ந்த துறைகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். தங்களது குறிக்கோள்களை நோக்கி பணியாற்றினால் வெற்றி பெறலாம். பணம் சம்பாதிக்கலாம். தோல்விகளை கற்பதற்கான வாய்ப்பாக பாருங்கள். நல்ல சிந்தனைகளை கொண்டவர்ளுடன் பழகுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.