சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிப்பா? – தமிழக காவல் துறை மறுப்பு

சென்னை: தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் அது தொடர்பாக தமிழக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வேலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக அண்மையில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு ஆகும். வேலுார் மத்திய சிறை உட்பட தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எவ்வித சிரமுமின்றி தங்கள் மத வழிபாட்டைத் தொடரும் வகையில் சமமான மத வழிபாட்டு உரிமையை பெற்றுள்ளனர்.

சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் சிறை விதிகளின்படி ஏற்கனவே நடைமுறையிலுள்ள வழக்கத்தின்படியும் எவ்வித மாற்றமும் இன்றி மழுமையாக இயங்கி வருகின்றன. சிறை வளாகங்களில் அமைந்துள்ள இவ்வழிபாட்டுத் தலங்களுக்கு சிறைவாசிகள் சென்ற வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை மத்திய சிறை வேலுார் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து சிறைகளிலும் பின்பற்றப்படுகிறது.

நடப்பாண்டு உட்பட ஒவ்வொரு ஆண்டும் புனித ரம்ஜான் மாதத்தில், வேலுார் மத்தியசிறை, உயர்பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் சிறைவாசியினருமம் தங்கள் தொகுதிகளில் நோன்பு கடைபிடிக்கவும் தொழுகை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண். 286(6)-ன் படி ரமலான் காலத்தில், நோன்பிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் தங்களுக்கான உணவை தனியாக சமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், தொழுகையின் போது தேவைப்படும் பாய்கள் மற்றும் தண்ணீர் போன்றவை தேவையான அளவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இருப்பினும், தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(4)-ன் படி பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளானாலும் மதவழிபாடு அல்லது மதச்சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பெரிய அளவில் கூட்டம் கூடுவது அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, அனைத்து மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளும் தங்களது மத வழிபாடு மற்றும் மதச் சடங்குகளை நிறைவேற்றிட சிறைத்துறையின் வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் மற்றும் சிறைவிதிகளுக்குட்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, சிறைவாசிகள் உரிமைகள் மறுக்கப்படுவதாக செய்தி ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்ற விஷமத்தனமான ஒன்று என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.