"காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக அமையும்" – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஹமாஸ் தீவிரவாதிகளுடனான இஸ்ரேல் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இதுவரை காசாவில் 2670 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன் வெளிப்பாடாக 2 போர்க்கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் போர்டு போர்க்கப்பல் ஏற்கெனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஐசனோவர் போர்க்கப்பலும் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹமாஸை அழிப்பது அவசியம். ஆனால் அதற்காக ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு ” என்று கூறியுள்ளார். 10 நாட்களாக நடைபெறும் போரில் இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்துள்ளனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர்.

சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பைடன் அளித்தப் பேட்டியில், “ஹமாஸ் தீவிரவாதிகள் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதிகள் அல்ல. ஆகையால் இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும். காசா ஆக்கிரம்ப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் செல்வீர்களா என்ற கேள்விக்கு அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு அழைக்கும்பட்சத்தில் டெல் அவிவ் செல்வேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஈரான் ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது போர் எல்லையை விரிவடையச் செய்வதே ஆகும் என்று கூறியிருந்தது. மற்றொருபுறம், பாலஸ்தீனத்தின் வடக்கு காசாபகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் பைடனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.