மதுரை: ‘அனுமதியில்லாமல் லியோ படத்துக்கு பேனர், பிளக்ஸ் வைக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் இரு தியேட்டர்கள் உள்ளன. இங்கு அக். 19-ல் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு உயரமான, நீளமான பதாகை மற்றும் கட்அவுட் வைப்பார்கள். பட்டாசுகள் வெடிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். பள்ளி, கல்லூரி வாகனங்கள், வேலைக்கு செல்வோருக்கு பாதிப்பு ஏற்படும்.
தியேட்டரில் பார்க்கிங் வசதியிருந்தாலும் ரசிகர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தியேட்டர்களில் ரசிகர்கள் வைக்கும் விளம்பர போர்டுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் லியோ திரைப்படதுக்கு ராட்சத விளம்பர பதாகை, கட்அவுட், பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “தியேட்டர்கள் முன்பு பேனர் வைக்க அனுமதி கோரி விண்ணப்பம் வரவில்லை. அனுமதியும் வழங்கவில்லை” என்றார். அப்போது மனுதாரர் வழக்கறிஞர், “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் லியோ பட பேனர் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையடுத்து ‘திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் லியோ பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா?’ என மாநகராட்சி வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அனுமதியில்லாமல் சில இடங்களில் லியோ பட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவைகள் அகற்றப்பட்டுள்ளன’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அனுமதியில்லாமல் பேனர், பிளக்ஸ் வைக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதனிடையே, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்துக்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.