டெல்லி: தகாத உறவு, 3 கொலைகள்… 20 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்

புதுடெல்லி,

டெல்லியில் பாவனா பகுதியை சேர்ந்தவர் பாலேஷ் குமார். கடற்படையில் ஊழியராக பணியாற்றிய இவர், 2004-ம் ஆண்டு பணத்தகராறில் இவருடைய உறவினரான ராஜேஷ் என்ற குஷிராம் என்பவரை படுகொலை செய்துள்ளார். இதுதவிர, 2 தொழிலாளர்களையும் கொலை செய்துள்ளார்.

ராஜேஷின் மனைவியுடன் பாலேஷுக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. பாலேஷின் 40 வயதில் இந்த சம்பவம் நடந்தபோது, போலீசில் சிக்காமல் அவர் தப்பி விட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவருடைய சகோதரர் சுந்தர்லாலை போலீசார் கைது செய்தனர்.

20 ஆண்டுகளாக அமன் சிங் என்ற வேறு பெயரில் டெல்லியின் நஜப்கார் பகுதியில் அவருடைய குடும்பத்தினருடன் பாலேஷ் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் சிறப்பு கமிஷனர் ரவீந்திர யாதவ் கூறும்போது, அப்போது போக்குவரத்து வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பாலேஷ், லாரி ஒன்றில் ராஜஸ்தானுக்கு தப்பினார்.

அதன்பின் லாரியை தீ வைத்து எரித்து விட்டு, தொழிலாளர்கள் 2 பேரையும் எரித்து கொலை செய்து விட்டார். இதுபற்றி விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார், 2 பேரில் ஒருவர் பாலேஷ் என்று அடையாளம் கண்டனர். மற்றொருவர் யாரென தெரியவில்லை.

இதேபோன்று பாலேஷின் குடும்பத்தினரும் உடல்களில் ஒன்றை பாலேஷ் என அடையாளம் காட்டினர். இதனால், வழக்கின் சந்தேகத்திற்குரிய முக்கிய நபர் உயிரிழந்து விட்டார் என வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த போலியான மரணத்திற்கு பின் பஞ்சாப்புக்கு தப்பிய பாலேஷ், குடும்பத்தினரின் உதவியுடன் அமன் சிங் என பெயர் மாற்றம் செய்து, போலியான அடையாள சான்றை பெற்றுள்ளார்.

அவர் மனைவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததுடன், காப்பீட்டு பலன்கள், இந்திய கடற்படையின் ஓய்வூதியம் ஆகியவற்றை மனைவிக்கு கிடைக்கும்படி மாற்றியுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய லாரி, பாலேஷின் சகோதரர் மஹிந்தர் சிங் பெயரில் பதிவாகி உள்ளது. அதற்கான காப்பீட்டு தொகையும் பெறப்பட்டு உள்ளது. இதன்பின் டெல்லி நஜப்காருக்கு குடும்பத்துடன் சென்று, பாலேஷ் வசித்து வந்துள்ளார்.

டெல்லியில் 2000-ம் ஆண்டில் கலைபொருட்கள் திருட்டு வழக்கில் பாலேஷுக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 8-ம் வகுப்பு வரை படித்த பாலேஷ், 1981-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்ந்து 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஓய்வுக்கு பின் டெல்லியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உளவு தகவலின் அடிப்படையில் பாலேஷை போலீசார் கைது செய்தனர். அவருடைய மனைவிக்கு குற்ற சம்பவத்தில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.