திருவண்ணாமலை: தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற 34-வது தென்னிந்திய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டிரையத்லான் பிரிவில் 1,425 புள்ளிகளை பெற்று திருவண்ணாமலை மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஓடு… ஓடு… வாழ்க்கையின் எல்லை வரை ஓடிக்கொண்டே இரு என்பார்கள். இவ்வாக்கியம், தடகள வீரர்களுக்கான ‘தாரக மந்திரம்’. ஓடுவது மட்டுமல்ல, வேகமாக… அதி வேகமாக என இலக்கை அடையும் வரை ஓட வேண்டும். நொடி பொழுதில் நிலை மாறிவிடும் என கூறுவதுபோல், ஒரு விநாடியில் பதக்கத்தை தவறவிடுவது, ஓட்டப்பந்தயத்தில் மட்டுமே நிகழும் காட்சிகள். இதனால்தான், தடகள வீரர்களின் கால்கள், புல்லட் ரயில் சக்கரங்களுக்கு இணையாக, அதிவேகமாக சுழன்று கொண்டே இருக்கிறது.
தடைகளை தகர்த்தால்தான் சாதிக்க முடியும் என்ற மன உறுதியுடன் களம் இறங்கி, தெலங்கானா மாநிலம் வாரங்கல் ஜே.என்.மைதானத்தில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற 34-வது தென்னிந்திய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டிரையத்லான் பிரிவில் 1,425 புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் க.சரண்ராஜ்.
மேலும் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவில் வசிக்கிறேன். என் தந்தை கண்ணன், வேலூரில் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். தாய் சத்தியவாணி, வீட்டை பராமரித்து வருகிறார். திருவண்ணாமலை விடிஎஸ் ஜெயின் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். தடகள பயிற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வேன்.
எனக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பிரபாகரன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களின் நுட்பமான பயிற்சியால் பள்ளி கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, தென்னிந்திய அளவிலான இளையோர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றேன். பள்ளி நிர்வாகம், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அளித்த ஊக்கம் காரணமாக, கடின முயற்சியுடன் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளேன்.
60 மீட்டர் இலக்கை 7.99 விநாடிகளில் கடந்து 5-வது இடத்தையும், நீளம் தாண்டுதலில் 5.60 மீட்டர் இலக்கை அடைந்து 2-வது இடத்தையும், சிறுவர் ஈட்டி எறிதலில் 34.26 மீட்டர் இலக்கை தொட்டு 4-வது இடத்தையும் பிடித்தேன். 3 போட்டிகளையும் இணைத்து கூறப்படும் டிரையத்லான் பிரிவில் 1,425 புள்ளிகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளேன். என்னுடன் தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவில் இருந்து 13 மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து வரும் காலத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்க வேண்டும். 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது இலக்காகும். போட்டி கடுமையாக இருக்கும். இதற்கு ஏற்ப பயிற்சியை தீவிரப்படுத்தி தங்கம் வெல்வேன்” என தெரிவித்துள்ளார்.
வெண்கலம் வென்ற மாணவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து மற்றும் பாராட்டை தெரிவித்தனர்.