மட்டக்களப்பில் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெருக்க மரம் வெட்டி அகற்றப்பட்டது!!

நாட்டில் அண்மைக்காலமாக நிலவிவரும் காலநிலை மாற்றத்தினால் பல இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுவருவதுடன் அண்மைய நாட்களில் வீதியோர மரங்கள் முறிந்து வீழ்ந்ததனால் பல உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளது.

அதற்கிணங்க அரசாங்கம் அனர்த்த நிலையினை கருத்திற்கொண்டு வீதியோரங்களில் முறிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்கான பணிப்புரையினை தேசிய ரீதியில் விடுத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வாறான ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணப்படும் பாரிய மரங்களை அகற்றும் நடவடிக்கைகள் மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஜாமியுல் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக இருந்த பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெருக்க மரம் நேற்று (16) வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் காணப்பட்ட குறித்த மரத்தினை வெட்டி அகற்றியுள்ளனர்.

குறித்த மரத்திற்கு அருகாமையில் மட்டக்களப்பின் பிரபல பாடசாலை அமைந்துள்ளதுடன், மரம் உடைந்து விழும் அபாய நிலையில் இருந்தமை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் இதன்போது தெரிவித்துள்ளதுடன், மரத்தை வெட்டியகற்றியமை காலத்தின் தேவைக்கு ஏற்பவே நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.