தற்போதைய இந்திய டிரண்டிங் `லியோ’ திரைப்படம்தான். ரசிகர்களின் இமாலய எதிர்பார்ப்பைத் தொடர்ந்து இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

‘லியோ’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் பலரும் பல வகைகளில் இத்திரைப்படத்தைக் குறித்து டீகோட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ‘லியோ’ திரைப்படம் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ ( A History of Violence) என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் எனவும் கூறி வருகின்றனர். ‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இந்த கிசு கிசு தகவலை மேலும் வலிமையாக்கியுள்ளது. ஒரிஜினல் எனச் சொல்லப்படுகிற ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்திற்கும் ‘லியோ’ திரைப்படத்திற்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ என்கிற DC-யின் கிராபிக் நாவலை மையப்படுத்தி இயக்குநர் டேவிட் க்ரோனென்பெர்க் அதே தலைப்பில் இயக்கியிருந்த இத்திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது. விகோ மோர்டென்சன், மரியா பெல்லோ, எட் ஹாரிஸ், வில்லியம் ஹர்ட் ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பிற்காகவும் பெரிதும் கவனிக்கப்பட்டது. திரைக்கதைக்காகவும் நடிப்பிற்காகவும் அந்தச் சமயத்தில் பல விருதுகளையும் வென்றது. கிராபிக் நாவலைத் தழுவி திரைக்கதையாசிரியர் ஜோஷ் ஓல்சன் இத்திரைப்படத்தின் திரைக்கதையைச் செழுமைப்படுத்தியிருந்தார்.

மில்ப்ரூக் எனும் சிறு நகரத்தில் தனக்கென ஒரு கஃபே வைத்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் டாம் ஸ்டால் (விகோ மோர்டென்சன்) ஒரு வன்முறைச் சம்பவத்தைத் தடுப்பதன் மூலமாகப் பிரபலமடைந்து விடுவார். அதைத் தொடர்ந்து அவர் டாம் ஸ்டால் கிடையாது ஜோயி குசாக் என்பதாக அடையாளம் காட்டும் ஒரு கும்பல், அவரைக் கொலை செய்ய முயற்சி செய்வார்கள். அதன் பிறகு டாம் ஸ்டாலுக்கும் அந்த கேங்கின் பெரிய தலைகளுக்கும் இடையில் ஒரு சில ட்விஸ்ட்களுடன் நடக்கும் மோதலே இத்திரைப்படத்தின் கதை. இந்த ஒன்லைன் கதையம்சம்தான் ‘லியோ’ திரைப்படத்தையும் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்தையும் ரசிகர்கள் ஒப்பீட்டு பார்ப்பதற்கு வலிமையான காரணம்.
அதனைத் தொடர்ந்து ‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதும் பல பிரேம்களை வைத்தும், கதாபாத்திரங்களை வைத்தும் ரசிகர்கள் தங்களது டீகோட் போஸ்டுகளைப் பதிவிடத் தொடங்கி விட்டனர்.
‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லரில் விஜய் கையில் துப்பாக்கியை ஏந்திய வண்ணத்தில் இருப்பது போன்ற ஃபிரேம் இந்தத் திரைப்படத்திலும் இருக்கிறது என்பதாக ரசிகர்கள் ஒப்பிட்டனர்.
மேலும் கதாபாத்திர வடிவிலாகப் பார்க்கும்போது,
ஜோயி குசாக் (எ) டாம் ஸ்டால் கதாபாத்திரத்தை பார்த்திபன் (எ) லியோ தாஸ் (விஜய்),
எடி ஸ்டால் கதாபாத்திரத்தை சத்யா (த்ரிஷா),
டாம் ஸ்டாலின் மகனாக வரும் ஜேக் ஸ்டால் கதாபாத்திரத்தை மேத்யூ தாமஸ்,
காவல் அதிகாரி சாம் கார்னே கதாபாத்திரத்தை கெளதம் மேனன்,
ரிச்சி குசாக் கதாபாத்திரத்தை ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்)
என்பதாக ஒப்பிட்டுப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இது மட்டுமின்றி டாம் ஸ்டாலின் பெண் குழந்தை கதாபாத்திரத்தை ‘லியோ’ திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்த பெண் குழந்தை கதாபாத்திரத்துடனும் ஒப்பிடுகிறார்கள்.

‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகன் டாம் ஸ்டால், மில்ப்ரூக் நகரத்தில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தனது அடையாளத்தை மறைத்து வாழ்வதாகவும் காட்டியிருப்பார்கள். எடி ஸ்டால் டாம் ஸ்டாலின் மனைவியாக நடித்திருப்பார். அதுமட்டுமின்றி சில சமயங்களில் தனது கணவருக்கு கஃபேவில் உதவி செய்வதாகவும் காட்டியிருப்பார்கள். ஜேக் ஸ்டால், டாம் ஸ்டாலின் மகனாகவும், சாம் கார்னே, டாம் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான காவல் அதிகாரியாகவும் நடித்திருப்பார். ரிச்சி குசாக், டாம் ஸ்டாலின் சகோதரராக நடித்திருப்பார். அவர் டாம் ஸ்டால் மீது பகை கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள். இவையெல்லாம்தான் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திரத் தன்மைகள்!

இந்தப் படத்தைப் பார்த்த பலரும் ‘லியோ’வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இப்படி ஆயிரம் காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமே கேள்வி முன்வைக்கப்பட்டபோது, “படம் LCU-வா இல்லையா, இந்தப் படத்தோட ரீமேக்கா இல்லையா… இதெல்லாம் இப்ப சொன்ன நல்லாயிருக்காது. வந்து தியேட்டர்ல பாருங்க! அந்த எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பாயில் பண்ண வேண்டாம்” என்பதாகப் பதில் சொல்லியிருந்தார். அதுவும் ஒரு வகையில் உண்மைதான்!
எது எப்படியோ, `லியோ’ இதன் அதிகாரபூர்வ ரீமேக்காகவே இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் நிச்சயம் சில மாறுதல்கள் செய்து சர்ப்ரைஸ்கள் சேர்த்திருப்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.