வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டமானது. இதில் 500 பேர் வரை பலியாகினர். இது மனிதாபிமானமற்ற செயல் . தாக்குதல் மன்னிக்க முடியாத போர் குற்றம் என ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் இன்றுடன் 12வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில், இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், காசா பகுதியில், 2,778க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு(அக்.,17) ராக்கெட் குண்டு காசா பகுதியில் உள்ள அஹில் அராப் என்ற மருத்துவமனை மீது விழுந்ததால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் அதனை மறுத்துள்ளது.

இஸ்ரேலிடம் ஆதாரம் கேட்ட ரஷ்யா
இது குறித்து, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: காசாவில் மருத்துவமனை மீது நடைபெற்ற தாக்குதல் மன்னிக்க முடியாத போர் குற்றம்.
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நாவில் மீண்டும் தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. இது மனிதாபிமானமற்ற செயல். இஸ்ரேல் இதில் ஈடுபடவில்லை என்றால் செயற்கைக்கோள் படங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிபர் கண்டனம்
காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீதான தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முகமது அப்பாஸ் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 12வது நாளாக தொடர்ந்து வரும் மோதலுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்.

பைடன்- அரபு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு ரத்து
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் மன்னர் அப்துல்லா தலைமையில் இன்று இந்த சந்திப்பு நடைபெறுவிருந்தது.
இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரபு நாடுகளின் தலைவர்களான அஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்துல் எல் சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.