X Not A Bot: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருந்ததில் இருந்து பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, ட்விட்டர் என்ற பெயர் X என மாற்றப்பட்டது. அதிலும் ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்குவதற்கு கட்டணம் என்ற மாற்றங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
எதற்கு கட்டணம்?
அந்த வகையில், X தளத்தில் இனி இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிகிறது. அடிப்படை அம்சங்களுக்குக் கூட X தளம் இனி கட்டணம் வசூலிக்கத் தொடங்குகிறது என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. X நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “இனி பதிவிடவோ அல்லது மற்றவர்களின் பதிவுக்கு பதிலளிக்கவோ விரும்பும் பயனர்களுக்கு ஆண்டுக்கு 1 அமெரிக்க (சுமார் ரூ. 83) வசூலிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தா திட்டம் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள பயனர்களுக்கான மட்டும் தற்போது சோதனைத் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய பயனர்கள் மட்டுமே X தளத்தில் இடுகையிடுவதற்கும் தொடர்புகொள்வதற்கும் பணம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. அதுவும், மேற்கூறிய இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் திட்டம் என தெரிகிறது. எனவே நீங்கள் இன்று X தளத்தில் இணைய விரும்பினால் மற்றும் மேடையில் ஏதாவது இடுகையிட விரும்பினால், அதைச் செய்ய உங்களுக்கு ஆண்டுக்கு 1 அமெரிக்க டாலர் விதிக்கப்படும்.
Not a Bot
இருப்பினும், புதிய பயனர்கள் உள்நுழைந்து பயன்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்க முடியுமா என்பதை அறிவிப்பில் குறிப்பிடவில்லை. அடிப்படையில், இடுகைகளைப் பார்ப்பதற்கும், பதிலளிப்பதற்கோ முடியாது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
X ஆனது அதன் நேர்மறையான பணப்புழக்கத்தை உருவாக்க இது ஒரு புதிய வழியாகத் தோன்றினாலும், அந்நிறுவனம் இதனை வேறுவிதமாக விளக்கியுள்ளது. மேடையில் ஒரு இடுகையில் நிறுவனம் இது லாபத்திற்காக எடுக்கப்பட்ட செயல்பாடு இல்லை என கூறப்படுகிறது. “சிறிய கட்டணத்துடன் X தளம் உண்மையான கணக்குகளை சமநிலைப்படுத்தவும், அதே வேளையில் Spam மெசேஜ்களை குறைப்பதற்கும் ஏற்கனவே இருக்கும் வெற்றிகரமான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக புதிய சோதனை உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாபத்திற்கானது அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேம் மற்றும் போட் கணக்குகளைக் குறைப்பதற்காக X தளம் 1 அமெரிக்க டாலரை வசூலிக்கத் தொடங்கியுள்ளதால், இந்தப் புதிய திட்டத்தை ‘Not a Bot’ என்று அந்நிறுவனம் அழைக்கிறது. X தளத்தில் புதிதாக கணக்கு திறப்பவர்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.
வழிமுறைகள் இதோ
பதிவு செய்வதற்கான முதல் படி, மொபைல் எண் சரிபார்ப்பாக இருக்கும். பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை சரிபார்க்க வேண்டும். இரண்டாவதாக, 1 அமெரிக்க டாலரை செலுத்தவும். இது அவர்களுக்கு விருப்பமான இடுகைகள், மற்ற பதிவுக்கான பதில் போன்றவற்றின் அணுகலை வழங்கும் மற்றும் அவற்றை புக்மார்க் செய்யவும் உங்களை அனுமதிக்கும்.
இந்தத் திட்டத்திற்கான விலை நாடு மற்றும் நாணயத்தைப் பொறுத்து மாறுபடும் என தெரிகிறது. துல்லியமாகச் சொல்வதானால், நியூசிலாந்திற்கு வருடத்திற்கு $1.43 NZD மற்றும் பிலிப்பைன்ஸுக்கு வருடத்திற்கு 42.51 PHP என்றும் தெரிகிறது. இந்தப் பிராந்தியங்களில் உள்ள அனைத்து புதிய பயனர்களும் ‘Not a Boat விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ படித்து ஒப்புக்கொள்ள வேண்டும்.