புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதலில், மனிதாபிமான சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை மீது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 470 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமே காரணம் என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட் குண்டு, தவறி மருத்துவமனை மீது விழுந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம், காசா மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அரிந்தம் பக்சி, “ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் கவலை அளிக்கிறது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை கடுமையாக கடைபிடிக்குமாறு இந்தியா வலியுறுத்துகிறது. இஸ்ரேல் மீதான கொடூரமான தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச சமூகம் ஒன்றாக நிற்க வேண்டும். பாலஸ்தீன விவகாரத்தில், இரு நாடுகளின் தீர்வுக்கான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, “காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் துயரமான உயிரிழப்புகள் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருந்தார். “தற்போதைய மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயம். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் கூறி இருந்தார்.
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இருதரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்; 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிரித்து வருகிறது. அங்கு இதுவரை 3,478 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.