'ஏன் விதிமீறலை கவனப்படுத்தவில்லை?' – ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளிடம் காட்டமான அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் மற்றும் கிச்சனநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த இருவேறு விபத்துகளிலும் சிக்கி மொத்தம் 14 பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரெங்கபாளையத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மட்டும் 12 பெண், ஒரு ஆண் உள்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர்‌ மாவட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனை தொடர்பான பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டம்

அப்போது கூட்டத்தில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகால பட்டாசு விபத்து புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, தனிப்பட்ட மனிதனின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துகளில் குறைந்த அளவிலான உயிர்சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே, பெரிய அளவிலான உயிர்சேத பட்டாசு விபத்துகள் அனைத்தும் சட்டவிதிமுறைகளை மீறியதால் நிகழ்ந்தவையாக குறிப்பிடப்படுகிறது. பட்டாசு விபத்துக்களை தடுப்பது நம் கடமை. விபத்து நடப்பது இயற்கை என்ற மனோபாவத்தை நாம் கைவிட வேண்டும். நாம் அனைவரும் உயிரின் மதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே தந்தையை இழந்த மாணவி, நடந்த வெடிவிபத்தில் தன்‌ தாயையும் இழந்திருக்கிறார். தாய், தந்தை இல்லாமல் சமூகத்தில் ஒரு பள்ளி மாணவி வாழ்வதென்பது மிக கடினம். சட்ட விரோத பட்டாசு உற்பத்தி குறித்து தகவல்தெரிந்தால் மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுப்பது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு என நினைத்து செயல்பட வேண்டும்” என்றார்.

அமைச்சர் உதவி

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், “தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பட்டாசு உற்பத்தி தொடர்பான‌ விதிகளை பின்பற்ற தவறும்பட்சத்தில் தான் இந்தமாதிரியான விபத்துக்கள் நடக்கிறது. பொதுவாக, அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை விட கூடுதலான நபர்களை பணியில் அமர்த்துவது, மருந்து கலப்பதில் ஏற்படும் கவனக்குறைவு, பட்டாசு ஆலை உரிமம் ஒருவர் தன்னுடைய உரிமத்தை பயன்படுத்தி குத்தகைதாரரை தொழில் செய்ய அனுமதிப்பது போன்ற விதிமீறல் செயல்களும் வெடி விபத்துக்கு அடிப்படைக்காரணம். பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் தொடர்பாக அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் முன்பே எச்சரித்திருந்தால் வெடிவிபத்து தடுக்கப்பட்டிருக்கும்.

பட்டாசு தொழில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏன் சரிவர ஆய்வு செய்யவில்லை. பட்டாசு ஆலைக்குள் தகரஷெட் அமைத்தது விதிமீறல் இல்லையா?, இது ஏன் அதிகாரிகள் கவனத்திற்கு வரவில்லை. அதிகாரிகள் ஆய்வில் ஏன் விதிமீறல்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆலையில் இருந்த விதிமீறல்களை தடுப்பதற்கும் ஏன் முயற்சிக்கவில்லை. எந்த விதிகளின் அடிப்படையில், பட்டாசு தயாரிக்க டி.ஆர்.ஓ., உரிமம் கொடுக்கப்பட்டதோ அவை சரியாக பின்பற்றுகிறதா? இல்லையா? என்பதையெல்லாம் அடிக்கடி அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் செய்ய வேண்டும்.

நிவாரணம்

அதேபோல் உரிமையாளர்களும், முதல்நிலை அலுவலரில் இருந்து கடைநிலை ஊழியர் வரை அனைவரையும் கண்காணிக்க வேண்டும். சிறு விதிமீறலுக்கும் கூட இடம் கொடுக்கக் கூடாது. உரிமையாளர்களும் சமூக பொறுப்போடு செயல்பட வேண்டும். சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து அருகில் இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக அதை அதிகாரிகளிடம் சொல்ல வேண்டும். பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக விரிவான அறிக்கை பெற்று தவறு செய்தவர்கள் மீது கடுமையான‌ நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒருவேளை இந்த தவறுக்கு அதிகாரிகள்‌ காரணமென்றால், அவர்கள்தான் உயிரிழப்புக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்” என பேசினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை பெற்று, தவறுக்கு காரணமானவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய விபத்துக்கள் நடப்பதற்கு பொறுப்பற்று செயல்பட்டிருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த தொழிலாக இருந்தாலும் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு செய்யவேண்டும்” என்றார்.

தூக்கியெறியப்பட்ட காசோலை

தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புப்படி தலா 3 லட்சம் ரூபாய்கான காசோலையை அரசின் சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு சி.வி. கணேசன் ஆகியோர் வழங்கினர்.

தாய், தந்தையை இழந்து தவிக்கும் மாணவி சந்தியாவுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அழகாபுரியில் போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலையை தூக்கி எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அமளி

இதையடுத்து அரசுத்துறை அதிகாரிகள், காவல் துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட குடும்பத்தினர், கூச்சல் குழப்பத்தை கைவிட்டு அரசின் நிவாரண தொகை 3 லட்சத்திற்கான காசோலையை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரா மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.