காசாவில் ஹமாஸ் வசம் 203 பிணைக் கைதிகள்; இதுவரை 306 வீரர்கள் கொலை: இஸ்ரேல் ராணுவம் தகவல்

டெல் அவிவ்: காசாவில் பிணைக் கைதிகளாக 203 பேர் இருப்பதாகவும், ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 306 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இரு தரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளால் இதுவரை 203 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 300 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த எண்கள் இறுதியானவை அல்ல. இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காணாமல் போனோர் தகவல்களைத் திரட்டி வருகிறது. காசா பிடியில் இருப்போர் குறித்து அவரவர் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலில் இதுவரை 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேல் தாக்குதலில் தெற்கு காசாவில் வான்வழித் தாக்குதலில் ஒரு வீடு சேதமடைந்தது. அதில் 7 சிறு குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

வரிசையாகக் கிடத்தப்பட்ட குழந்தைகளின் சடலம் – மேற்கு காசா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அந்தச் சடலங்களைக் கொண்டு அங்கிருந்த மருத்துவர்களே கண்ணீர் சிந்தியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் குழந்தைகளின் சடலங்கள் வரிசையாக கிடத்தப்பட்டதைக் கண் கொண்டு காண இயலாமல் பெண்கள் கண்களை மூடிக் கொண்டதாகவும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் உயிரிழந்த 3,300-க்கும் மேற்பட்டவர்களில் கால்வாசி பேர் குழந்தைகள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிறுத்தியே ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகள் பலவும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.