சபரிமலை:சபரிமலை கியூ காம்ப்ளக்ஸ்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஆலோசானை கூட்டத்தில் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.
சபரிமலையில் மண்டல. மகர விளக்கு சீசன் நவ.,16 – ல் தொடங்க உள்ளது. இது தொடர்பான பணிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
இதில் பினராயி விஜயன் பேசியது: சபரிமலை மற்றும் பாதைகளை மாவட்ட நிர்வாகங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சபரிமலை சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்குவதை தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும். விருச்சுவல் கியூ தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் போலீசாருக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும், பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும் கண்டக்டர் இல்லாமல் பஸ் இயக்கும் முறை தொடர்வது நல்லது. சபரிமலை செலவினங்களுக்காக பணம் எடுக்க கருவூல கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது: சபரிமலையில் உள்ள 18 கியூ காம்ப்ளக்ஸ்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18ஆம் படிக்கு மேல் ஒரு மடக்கும் வசதி உள்ள கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணிக்கை எண்ணும் இடத்துக்கு முன்னால் மெட்டல் டிடெக்டர் நிறுவப்படும். இங்கு பெரிய ஸ்கிரீனும் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
பம்பையில் நவீன வசதிகளுடன் கூடிய 168 கழிப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் 36 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மயக்கம் அடையும் பக்தர்களை உடனுக்குடன் மருத்துவமனையில் சேர்க்க பத்து பேர் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்படும். நிலக்கல்லில் 16 நவீன கழிப்பறைகள் புதிதாக அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலை பாதையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் டாக்டர்கள் நர்சுகள் நியமிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த சீசனில் 218 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இந்த சீசனில் இது 250 ஆக உயரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க நான்கு அதிவிரைவு படை அமைக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மூன்று பாம்பு பிடி நிபுணர்கள் குழுவும் இரண்டு யானை பாதுகாப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை சார்பில் சீசனில் 1852 பேர் பணியமத்தப்படுவார்கள் என்று அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், கே ராஜன், கே கிருஷ்ணன் குட்டி, ஏ கே சவேந்திரன், ஜி ஆர் அனில், முகமது ரியாஸ், ரோஷி அகஸ்டின், வீணா ஜார்ஜ் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்