சபரிமலை, கேரளாவில் உள்ள சபரி மலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் கார்த்திகை 1ம் தேதி முதல் மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் துவங்க உள்ளன.
இதையடுத்து, சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கும், மாளிகைபுரம் சன்னிதிக்கும் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யும் பணி, கோவில் சன்னிதானத்தில் நேற்று நடந்தது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 17 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 12 பேரும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில், இரு கோவிலுக்கு தலா ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பந்தளம் அரண்மனை குழந்தைகள் வைதே வர்மா, நிருபமா வர்மா ஆகியோர் புதிய மேல்சாந்திகள் தேர்வு சீட்டுகளை எடுத்து தந்தனர்.
இதன்படி, சபரிமலையின் புதிய மேல்சாந்தியாக, மூவாற்றுப்புழா ஏனநல்லுாரைச் சேர்ந்த பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
மாளிகைபுரம் மேல்சாந்தியாக, திருச்சூரைச் சேர்ந்த பி.ஜி.முரளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும் வரும் கார்த்திகை முதல் ஓராண்டுக்கு இந்த பதவியில் இருப்பர். அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட பி.என்.மகேஷ், தற்போது புகழ்பெற்ற பரமேக்காவு பகவதி அம்மன் கோவிலில் பணிபுரிந்து வருகிறார்.
ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து, வரும் 22ம் தேதி இரவு 10:00 மணிக்கு சபரி மலை நடை மூடப்படுகிறது. பின்னர் சித்திரை மாத விசேஷ பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்