பங்காரு அடிகளார் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. முன்னதாக பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர்.

மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. .

இந்த சூழலில் மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தார். அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.