பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ்மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாகப் பாலஸ்தீனத்தின் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். கூடவே, இஸ்ரேலுக்கு அமெரிக்கா போர் ஆயுத உதவிகளையும் செய்துவருகிறது. அதேமயம், போர் தொடங்கிய அடுத்த நாளே, பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பக்கம் நிற்பதாக இந்தியப் பிரதமர் மோடி, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தெரிவித்தார். அதோடு, ஹமாஸின் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என இந்தியா கண்டனம் தெரிவித்தது.

சுமார், இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் இந்த பேரில், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலியர்களும், இஸ்ரேலால் 3,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்ளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் முக்கியமாக, காஸாவிலுள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 500 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். `இது இஸ்ரேலின் தாக்குதல்’ என ஹமாஸ் கூற, மருத்துவமனைமீது ஹமாஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன’ என இஸ்ரேல் கூறிவருகிறது.
இன்னொருபக்கம், காஸா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, “காஸாவின் அல் அலி மருத்துவமனையில் பலர் பலியான தகவலறிந்து அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரு தரப்பு மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயம். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் (Mahmoud Abbas) இன்று தொலைபேசியில் உரையாடிய மோடி, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்திருக்கிறார்.

இது குறித்து மோடி தனது X வலைதளப் பக்கத்தில், “பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவோம். தீவிரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்” என்று பதிவிட்டிருந்தார்.