புதுடில்லி, புதுடில்லியில் 15 ஆண்டுகளுக்கு முன், பெண் நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஐந்து பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
‘டிவி’ நிருபர்
கடந்த 2008ம் ஆண்டு செப்., 30ல், புதுடில்லியில் தனியார் ‘டிவி’ நிருபர் சவுமியா விஸ்வநாதன், 25, என்பவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் சென்றபோது, வசந்த்குஞ்ச் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜித் மாலிக், அஜய் குமார் மற்றும் அஜய் சேதி ஆகிய ஐந்து பேரையும் 2009ல் கைது செய்தனர்.
அதே ஆண்டு ஐ.டி., பெண் ஊழியர் ஜிகிஷா கோஷ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜித் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இவ்வழக்கில், புதுடில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ரவி கபூர், அமித் சுக்லா ஆகியோருக்கு துாக்கு தண்டனையும், பல்ஜித் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. அதன்பின் துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதற்கிடையே பெண் நிருபர் கொலை வழக்கில் நேற்று கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே தீர்ப்பளித்தார்.
குற்றச்சாட்டு
இதில், கைதான ஐந்து பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விபரங்கள், வரும் 26ம் தேதி பிறப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்