போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கு: ஆசம் கான், மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை

ராம்பூர்: போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில் சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகனுக்கு உ.பி.யின் ராம்பூர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம். இவர், லக்னோவில் ஒன்று, ராம்பூரில் மற்றொன்று என 2 பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இதற்கு ஆசம் கான் மற்றும் அவரது மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது. ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத் தில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் சக்சேனா அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “ராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில் அப்துல்லா ஆசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும் லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990, செப்டம்பர் 30 எனவும் உள்ளது. ஆசம் கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் ராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஆசம் கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து மூவருக்கும் அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

இதைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உ.பி.யில் கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்81 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவரது மனைவி, மகன்மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் ஆசம் கானும் கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அப்துல்லா ஆசமும் தங்கள் எம்எல்ஏ பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.