சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேவையான உதவிகள் பெற, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும், போட்டிகளில் பங்கேற்க தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கும் வகையில் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு தமிழக அரசால் முதல் கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தமிழக முதல்வர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
சுமார் ரூ.4 கோடி: பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவித் தொகையாக ரூ.3 கோடியே 96 லட்சத்து 48 ஆயிரத்து 649 வழங்கப்பட்டுள்ளது.
நல உதவிகள்: தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த, போதிய நிதி வசதி இல்லாத வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெறலாம். இதற்காக, https://tnchampions.sdat.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.