எதிர்பார்ப்புகள் இருந்த அளவுக்குச் சர்ச்சைகளையும் சந்தித்து, அவற்றை எல்லாம் கடந்து வெளியாகியிருக்கும் `லியோ’ எப்படி இருக்கிறது?
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தியோக் நகரத்தில் பார்த்திபன் (விஜய்), தன் மனைவி சத்யா (த்ரிஷா), தன் மகன் மற்றும் மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அங்கேயே ஒரு கஃபே நடத்திவரும் அவர், விலங்குகளை மீட்பவராகவும் உதவி வருகிறார். ஒரு நாள் இரவு, அவரது கஃபேயில் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்ய, தற்காப்புக்காக ஐந்து பேரைச் சுட்டுவிடுகிறார். உள்ளூர் தொடங்கி தேசிய மீடியாக்கள் வரை அவரைக் கொண்டாட, மாநிலவாரியாகப் பல கேங்ஸ்டர்கள் அவரை ‘லியோ’ என்று அடையாளப்படுத்தி பின்தொடர ஆரம்பிக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இறந்ததாகச் சொல்லப்படும் ‘லியோ’தான் பார்த்திபனா, பார்த்திபன் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்தாரா என்பதே படத்தின் கதை.

ஒருபக்கம் அன்பான கணவர், தந்தை எனப் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய், மற்றொருபுறம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆக்ஷன் அவதாரமும் எடுத்து அதிலும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள த்ரிஷாவிடம் உடைகிற காட்சியில் எமோஷனலாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆங்காங்கே வெளிப்படும் அந்தக் கதாபாத்திர வயதுக்குரிய நடுக்கமும் தவிப்பும் ‘பிளடி ஸ்வீட்’ சொல்ல வைக்கின்றன. இதிலிருந்து விலகி, வேறொரு பரிமாணத்தில் வரும் ‘லியோ’ கதாபாத்திரம் சர்ப்ரைஸ் பேக்கேஜ். கதையில் சிறிதளவே பங்களிப்பு என்றாலும் த்ரிஷா தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். விஜய்யின் மகனாக வரும் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் தமிழுக்கு நல்வரவு! மகளாக நடித்துள்ள இயலின் நடிப்பும் கியூட்.
சிறிது நேரமே வந்தாலும் வித்தியாசமான மேனரிஸத்தால் மிரட்டியிருக்கிறார் டேன்ஸ் மாஸ்டர் சாண்டி. அவருடன் கூட்டணி சேர்ந்து மிஷ்கின் போடுகின்ற ஒன்-லைனர்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. கொடூரமான வில்லன்களாக அறிமுகம் ஆகும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் அந்தக் கொடூரத் தன்மையைத் தங்களின் நடிப்பு மூலமாகச் சிறப்பாகத் தக்கவைத்துள்ளனர். குறிப்பாக அர்ஜுன், ஆக்ஷன் காட்சிகளில் தன் பெயரின் அடைமொழிக்கு நியாயம் சேர்கிறார். ரேஞ்சர் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் முக்கியமான காட்சிகளில் கவனம் பெறுகிறார். இவர்கள் தவிர பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டின், ராமகிருஷ்ணன் எனப் பலர் ஃப்ரேமில் ஆங்காங்கே வந்து போகிறார்கள்.

`அன்பெனும் ஆயுதம்’ என்ற மெலோடி அமைதியான நீரோடை என்றால், `நான் ரெடிதான் வரவா’ பாடல் அரங்கம் அதிரும் அடைமழை! பின்னணி இசையில் இரண்டு ஆங்கிலப் பாடல்கள், `பேட் ஆஸ் தீம்’ என ரியல் ராக்ஸ்டாராகப் பல காட்சிகளைக் காப்பாற்றி இருக்கிறார் அனிருத். `நான் ரெடிதான்’ பாடலில் தினேஷ் மாஸ்டரின் நடன வடிவமைப்பு சிறப்பு.
பனிப்பிரதேசத்தின் குளிர்ச்சி, புகையிலை தொழிற்சாலையின் வெக்கை என இருவேறு இடங்களைத் தனது ஒளியுணர்வால் சிறப்பாக வேறுபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. குறிப்பாக சிங்கிள் ஷாட்களில் வரும் இரண்டு காட்சி தொகுப்புகள் தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே போலக் கழுதைப் புலி (ஹைனா) வரும் சண்டைக் காட்சியின் VFX வடிவமைப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல்கல். ஆனால் கார் சேசிங் காட்சிகளில் மட்டும் ஆங்காங்கே செயற்கைத் தன்மை எட்டிப் பார்க்கிறது.
படத்தின் ஓர் அங்கமாகவே பயணிக்கும் சண்டைக் காட்சிகளைக் கதையின் முதுகெலும்பாகக் கருதி வடிவமைத்துள்ளார்கள் அன்பறிவு மாஸ்டர்கள். பிளாஷ்பேக் சண்டைக் காட்சியில் மட்டும் இயற்பியல் விதிகளைக் கொஞ்சம் மதித்திருக்கலாம். அதுமட்டும் இந்த ‘யுனிவர்ஸுக்கு’ வெளியே இருக்கும் உணர்வைத் தருகின்றன. படக்குழுவினர் அனைவரின் உழைப்பையும் சிரத்தை எடுத்துச் சிறப்பாகக் கோத்துள்ளார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். இருந்தும் இரண்டாம் பாதியின் நீளத்தைச் சற்று கத்தரித்திருந்தால், விறுவிறுப்பு குடியிருக்கும். புகையிலைத் தொழிற்சாலை, காஃபே எனக் கலை இயக்குநர் என்.சதீஷ் குமார் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

‘A History of Violence’ படத்தின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தன் உலகிற்கு ‘லியோ’வை அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வழக்கமான விஜய்க்கும் லோகேஷின் விஜய்க்கும் சரிசமமாக இடம்கொடுத்தே பயணிக்கிறது முதற்பாதி. விஜய் – த்ரிஷா காதல், சின்ன சின்ன சண்டைகள், பிள்ளைகளுடன் நடக்கும் உரையாடல்கள், ஹைனா சண்டை, விஜய்யின் ஆக்ஷன் என ஒரு என்டர்டெயின்மன்ட் பேக்கேஜாக அது ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் அடங்கிய ‘தாஸ் அண்ட் கோ’ கூட்டணியை வைத்து பதற்றத்தைக் கட்டமைத்த விதமும் நன்றாக க்ளிக் ஆகியிருக்கிறது. ஆரம்ப சண்டைக்காட்சிக்குப் பின்னணி இசையாக 90களில் வெளியான பாடல்களைப் பயன்படுத்திய விதம் சிறப்பு! க்ளைமாக்ஸிலும் இதே யுக்தி கைகொடுத்திருக்கிறது. ஒரு ஆக்ஷன் படத்திற்குத் தேவையான ஒரு மாஸ் ‘வைப்’புடன் வரும் இடைவேளை பெரும்பலம்.
ஆனால் முதற்பாதியிலிருந்த இந்த முழுமையும் நிதானமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். பிளாஷ்பேக் தொடங்கிப் பல இடங்களில் தள்ளாடுகிறது திரைக்கதை. லியோ கதாபாத்திரம் மற்றும் வில்லன்களுக்குக் கொடுக்கப்பட்ட பில்ட் அப் காட்சிகளுக்கு நியாயம் செய்யும் வகையில் பின்கதை இல்லை. அவற்றோடு நம்பத்தன்மையே இல்லாத ட்விஸ்ட்டுகள், தேவையற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை மழுங்கடிக்கின்றன. அதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ கதாபாத்திரம் படத்திற்குச் சாதகமாக இல்லாமல், பாதகமாகக் காலை வாரியிருக்கிறது.

‘லோகேஷ் பிராண்ட் கதாபாத்திரங்கள்’, சிறப்புத் தோற்றத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் தியேட்டர் மெட்டீரியலாக விசிலடிக்க வைத்தாலும் படத்தின் பிரதான கதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அதோடு ஒரு கட்டத்தில் பார்த்திபன் ‘பாட்ஷா’ இல்லை ‘மாணிக்கம்’தான் என்று நாமே ஏற்றுக்கொண்டாலும் நம்மையும் விடாமல் துரத்தி வியர்க்க வைக்கின்றனர். வீடு புகுந்து தாக்க வரும் வில்லன்களை ‘டிராப்’ செய்யும் காட்சிகளில் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில், பிரதான கதாபாத்திரமான விஜய்யை மட்டுமே மையமாக வைத்து, திரைக்கதை பின்னப்பட்டிருப்பதால், மற்ற பாத்திரங்கள் பலவீனமாக மாறியிருக்கின்றன. அந்த வகையில் இந்த `லியோ’, ஆக்ரோஷமான சிங்கம்தான், ஆனால் கர்ஜிப்பது பலவீனமான எதிரிகளிடம் மட்டும்!