காவிரி விவகாரம் | சட்டம், அரசியல் ரீதியில் தைரியமான நடவடிக்கை தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தருமபுரி: காவிரி விவகாரத்தில் சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இரு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (அக்.20) நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கோபுர விளக்குகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முந்தைய அரசும் கிடப்பில் வைத்திருந்தது. தற்போதைய அரசும் கிடப்பில் போட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுவதுடன், இளையோர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை தடுக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட்டில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் நிறைய இடங்களில் நெடுஞ்சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது. வந்தவாசி பகுதியில் உலக வங்கி கடன் பெற்று அமைத்த சாலையிலும் பல இடங்களில் தரமின்மை காணப்படுகிறது. அதேபோல, நெடுஞ்சாலை அமைக்கும்போது நிறைய இடங்களில் திட்டமிட்டு, ‘அண்டர் பாசிங்’ வசதிகள் அமைத்தால் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலையை சீரமைக்க தாமதிக்கிறார்கள்.

காவிரி பிரச்சினையை தமிழகத்தின் விவசாயப் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. பல மாவட்டங்களின் உயிர்நாடி பிரச்சினை. குடிநீர், வாழ்வாதாரம், தொழிற்சாலை அனைத்தும் இந்த ஆற்றை நம்பித்தான் உள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காது. இது தொடர்பான நடவடிக்கை வேகமாக இருக்க வேண்டும். கடிதம் எழுதுவதும், தீர்மானம் நிறைவேற்றுவதும் போதாது. சட்ட மற்றும் அரசியல் ரீதியான தைரியமாக நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பட்டாசு ஆலை உயிரிழப்புகளுக்கு அதிகாரிகள் தான் காரணம். பாதுகாப்பு முறைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தினால் இந்த விபத்துகளை தவிர்க்கலாம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது சாதி மற்றும் வன்னியர் பிரச்சினை இல்லை, சமூக நீதி தொடர்பான பிரச்சினை. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூக நீதி பேசும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தாமதம். தமிழகத்தில் சமூக நீதியை பெரியார் தான் தொடங்கி வைத்தார். அதை பின்பற்றும் கட்சிகள் சமூக நீதியை பேசுவதுடன் நின்றுவிடாமல் செயல்படுத்த வேண்டும்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறையவில்லை. அவர் சித்தராக வாழ்கிறார். ஆன்மிகத்தில் மட்டுமன்றி கல்வியிலும் பல நிறுவனங்களை நிறுவி ஏழைகளுக்கு கல்வி கொடுத்தவர். ஆன்மீக புரட்சியை செய்தவர். தேர்தல் அறிவித்த பிறகே பாமக தனித்துப் போட்டியா என்பதை தெரிவிப்போம்.” இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம் எல் ஏ வேலுசாமி, கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.