மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இடம்பெறவிருந்த ஜனாதிபதி தலைமையிலான 2023 தேசிய மீலாதுன் நபி விழா சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் முசலி தேசியப் பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விழா சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் ஒன்று மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் மற்றும் ஜனாதிபதியின் வடமாகணத்துக்கான இணைப்புச் செயலாளர் திரு.இலங்கோவன் அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற கூட்டத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் பின்பே இம் முடிவு எட்டப்பட்டது.
பருவப் பெயர்ச்சி காலம் என்பதால் மன்னாரில் அடைமழை பெய்து வருகின்ற காரணத்தினால் இவ் விழா சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து முசலி தேசியப் பாடசாலைக்கு மாற்றப் பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இவ்விழாவினை முன்னிட்டு 130 மில்லியன் ரூபா செலவிலான அபிவிருத்தித் திட்டங்கள் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீலாத்தை ஒட்டி மன்னார் மாவட்ட அபிவிருத்திகள் அடுத்த வருடமும் தொடர்ந்து இடம் பெறும். மன்னாரில் பிரதான மூன்று நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு 150 மில்லியன் ரூபா நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.