புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத் துறை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தபோது, `மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, ஏற்கெனவே விசாரிக்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, இந்த வழக்கை நாளை (அக்.20) அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. மேலும், அடுத்த வாரம் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி, இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அவசரம் ஏன்? – இந்த முறையீட்டின் போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள சில மணி நேரத்திலேயே மேல்முறையீடு செய்வது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைத்து விட்டதால், ஆன்லைன் வழியாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவேதான், ஜாமீன் கோரி விரைவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாக, செந்தில் பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.