ஜெயலலிதாவின் ‘தைரியம்’… ஸ்டாலினை சீண்டுகிறாரா சீமான்?!

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் உரிமை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.

ஜெயலலிதா

மேலும், ‘கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர மறுக்கிறது. அந்தக் கட்சியுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? காவிரி நீர் விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தமிழக மக்களை ஏமாற்றி, வஞ்சித்துவருகின்றன.

காவிரி தண்ணீரைப் பெறுவதற்கு தி.மு.க அரசு எந்த அழுத்தத்தையும் தரவில்லை. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுக்குத் தோல்விதான் கிடைக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், காவிரி பிரச்னையை இந்தளவுக்கு பொறுமையாக அணுகியிருக்க மாட்டார். கட்டாயமாக அவர் காவிரி நீரைப் பெற்றிருப்பார்.

ஸ்டாலின்

இதுபோன்ற ஒரு சூழலில் கட்டாயமாக ஜெயலலிதா கூட்டணியில் இருந்திருக்க மாட்டார். கூட்டணியைவிட்டு அவர் வெளியே வந்திருப்பார். ஜெயலலிதாவுக்கு இருந்த அத்தகைய துணிச்சல் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை’ என்றார் சீமான்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாமிடம் பேசினோம். “1995-ம் ஆண்டு காவிரியில் 205 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அந்த நேரத்தில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகள் தரப்பினர் என்று பலரையும் அழைத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது, ‘இப்படியே பிரச்னை தொடர்ந்தால், நெய்வேலியிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டால் என்ன… அப்போதுதான் கர்நாடகா வழிக்கு வருமா…’ என்று என்று கேட்டார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் பதறிவிட்டனர். ஜெயலலிதாவின் துணிச்சல் அப்படியானது.

தராசு ஷ்யாம்

அதன் பிறகு, காவிரி விவகாரத்தில் சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சரே சென்னைக்கு வந்தார். அப்படிப்பட்ட அழுத்தமான நடவடிக்கையை ஸ்டாலின் எடுக்கவில்லை. இன்னொன்று, தேசிய கூட்டணியில் மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. தேர்தலுக்கு முன்பாக தொகுதி உடன்பாடு செய்துகொள்ளலாம். ஆனால், ஓராண்டுக்கு முன்பாகவே ‘இந்தியா’ கூட்டணிக்கு தி.மு.க போய்விட்டது. அதனால், தி.மு.க தயங்கி நிற்கிறது. சீமானின் ஒப்பீடு சற்று கடினமானதாக இருந்தாலும், அவர் சொன்ன கருத்து நிஜம்தான்’ என்கிறார் ‘தராசு’ ஷ்யாம்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ‘ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களில் ஒவ்வொருவரின் செயல்படும் விதமும் வெவ்வேறாக இருக்கும். ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு இல்லை. காவிரி பிரச்னையைப் பொருத்தளவில், அதற்கென உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. அவற்றின் மூலமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வழிகள் இருக்கின்றன. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் தீர்வை நாடலாம். அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார்.

மாறாக, கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றால், அந்த நேரத்தில் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசலாமே என்று சொல்வது, சோனியா காந்தி சென்னைக்கு வந்தபோது காவிரி விவகாரம் பற்றி அவரிடம் கேட்டிருக்கலாமே என்பதெல்லாம், 140 ஆண்டுகால காவிரி விவகார வரலாற்றில் ஆயிரம் தடவை கேட்கப்பட்ட கேள்விகள்தான்.

ப்ரியன்

காவிரிரியில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, ‘இந்தியா’ கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வேண்டும்.. காங்கிஸ் கட்சியும் தி.மு.க-வுக்கும் இடையே விரிசல் ஏற்பட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் அவசரப்பட்டு பேசிவிடுவார். பிறகு அவரே தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார். ஜெயலலிதா துணிச்சலாகப் பேசுகிறார் என்பது போலத் தெரியும். ஆனால், தன் நிலைப்பாட்டை அவர் திடீரென்று மாற்றிக்கொள்வார். அதுதான் அவரது ஸ்டைல். உதாரணமாக, இனிமேல் என் வாழ்நாளில் பா.ஜ.க-வுடன் கூட்டணியே கிடையாது என்று 1999-ல் ஜெயலலிதா கூறினார். ஆனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அவர் கூட்டணி வைத்தார். அதில், தோல்வியையும் தழுவினார்.

ஸ்டாலின் – ஜெயலலிதா

ஆனால், முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தளவில், அவர் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் அவர் செயல்படுவதில்லை. மாறாக, டிப்ளோமேட்டிக்காக அவர் செயல்படுகிறார். துணிச்சல் பற்றி சீமான் சொல்கிறார். சீமான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? இந்த நேரத்தில் அண்ணா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ‘ஆட்சியில் இல்லாதவர்கள் வெறும் கரண்டியை ஆட்டிக்கொண்டு போகிறார்கள்… ஆட்சியில் இருப்பவர்கள் கரண்டியில் எண்ணெய்யை வைத்துக்கொண்டு போகிறார்கள்’ என்றார். அதுதான் யதார்த்தம்” என்கிறார் ப்ரியன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.