சென்னை: “அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். ஆளுநரின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். படிப்பை தொடர்வதா, விடுதலைப் போராட்டத்தில் சிறைக்கு செல்வதா என்ற கேள்வி எழுந்தபோது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்வதையே தேர்வு செய்தார் ; அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்மூலம் பல்கலைக்கழக தேர்வு எழுதுகிற வாய்பையும் இழந்து படிப்பையும் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விடுதலைப் போராட்ட களத்திலும், இன்றுவரை அரசியல் களத்திலும் மக்கள் நலனை முன்னிறுத்தி போராடி வரும் ஆளுமை என்.சங்கரய்யா. அவரின் மகத்தான தியாக வரலாற்றை இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளரான சாய்நாத் தமது ‘விடுதலைப் போராட்டத்தின் களப் போராளிகள்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். விடுதலைக்காகவே தன் படிப்பையும், பட்டம் பெறும் வாய்ப்பையும் இழந்த அவருக்கு, அதே மதுரை பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை எழுப்பியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என உடனடியாக அறிவித்தார்.
அதன் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சிண்டிகேட் மற்றும் செனட்டில் தீர்மானம் நிறைவேற்றி நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், சங்கரய்யாவுக்கு பட்டமளிக்கும் சான்றிதழில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பும் அதனை உறுதி செய்துள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு கொடுத்துவரும் சிறப்பு ஓய்வூதியம், பட்டயங்கள், பட்டங்கள் உள்ளிட்ட அரசின் எந்த கவுரவிப்புகளையும் ஏற்பதில்லை என்று முடிவெடுத்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகும். இந்த முடிவின் அடிப்படையில், சங்கரய்யா கடந்த காலங்களில் எந்த விருதுகளையும் மறுத்தே வந்துள்ளார். அதே சமயம் தமிழக அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதினை ஏற்றுக் கொண்ட அவர், அரசு அளித்த விருது தொகையான ரூபாய் 10 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.எனவே, அத்தகைய சிறப்பு வாய்ந்த சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதால் அந்த பட்டத்துக்கும், வழங்குகிற பல்கலைக்கழகத்துக்கும் தான் பெருமை கூடும் என்பது வெளிப்படை.
ஆனால், இந்துத்துவா அமைப்புகளும், அவற்றின் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த இயக்கங்கள் என்பது வரலாறு. பல சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஒத்துழைப்பு நல்கி ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வந்துள்ளது. இதன் பிரதிநிதியாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்திருப்பது வியப்பளிக்கவில்லை. விடுதலைப் போராட்ட காலத்தில் ஐந்து ஆண்டுகளும், பிறகு மக்களுக்கான போராட்டத்தில் 4 ஆண்டுகளும் என மொத்தம் ஒன்பது ஆண்டுகள் சிறை, இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என நீண்ட நெடிய தியாக வாழ்க்கையை கொண்ட சங்கரய்யாவின் அருமை பெருமைகளை உணர்வதற்கான தகுதியே இல்லாதவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி.
விடுதலைக்குப் பிறகும் இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்புகளை பாதுகாப்பதற்கும், சுரண்டலற்ற ஒரு சோசலிச சமூகம் அமைவதற்கும் உயரிய லட்சிய பிடிப்போடு போராடி இன்றுவரை நமக்கு வழிகாட்டி வரும் தோழர் சங்கரய்யாவின் பெருமையை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ரசிக்க முடியுமா? அரசியல் அமைப்புச் சட்ட மாண்புகளை அழித்து, கார்ப்பரேட் மூலதன சக்திகளின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்தும் சங் பரிவார கூட்டத்துக்கு அவரது வாழ்வின் மேன்மைகளும், சிறப்புகளும் எட்டிக்காயாகத்தானே கசந்திடும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். ஆளுநரின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது, என்று அவர் கூறியுள்ளார்.