டொரன்டோ இந்தியாவில் உள்ள கனடா துாதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில், 41 துாதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது.
வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இது, இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
கனடாவில் உள்ள இந்திய துாதரை அந்நாட்டு அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக, புதுடில்லியில் உள்ள கனடா துாதரை மத்திய அரசு வெளியேற்றியது.
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைவிட, புதுடில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதில் சமநிலை பேணப்பட வேண்டும் என்பதால், கனடா துாதரக அதிகாரிகளில், 21 பேர் மட்டுமே இந்தியாவில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படுவர்.
‘மீதியுள்ளவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அக்., 20க்குள் கனடா திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் துாதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும்’ என, மத்திய அரசு எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி நேற்று முன்தினம் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள கனடா துாதரக அதிகாரிகளை திரும்பப் பெறவேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களுக்கான துாதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என்றும், இந்திய அரசு ஒருதலைபட்சமாக அறிவித்து இருந்தது.
எனவே, இந்தியாவில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள், 41 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 42 பேரை திரும்பப் பெறுகிறோம். அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு விட்டனர்.
துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அவர்களை ஆபத்தில் தவிக்கவிட முடியாது.
துாதரக பாதுகாப்பு உரிமையை ரத்து செய்வது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. துாதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல்.
துாதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த உலகின் எந்த மூலையிலும் துாதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
இதற்காக இந்தியாவுக்கு எந்த பதிலடியும் நாங்கள் கொடுக்கப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, மும்பை, பெங்களூரு, சண்டிகர் நகரங்களில் உள்ள கனடா துாதரக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள கனடா நாட்டவர் அனைவரும், புதுடில்லியில் உள்ள தலைமை துாதரகத்துக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணியருக்கு எச்சரிக்கை!
இந்தியா செல்லும் கனடா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசு பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:இந்தியா முழுதும் பயங்கரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருப்பதால், அந்நாட்டுக்கு செல்லும் கனடா குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடா – இந்தியா உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, கனடாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு இந்தியாவில் அழைப்பு விடுக்கப்படுகின்றன. அந்நாட்டின் பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கனடாவுக்கு எதிரான செய்திகள் வெளியாகின்றன. எனவே, புதுடில்லி செல்லும் கனடா நாட்டவர், தங்கள் அடையாளங்களை முன்பின் தெரியாத நபர்களுடன் பகிரக்கூடாது. மும்பை, சண்டிகர், பெங்களூரு நகரங்களில் துாதரக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்நகரங்களுக்கு செல்லும் கனடா நாட்டவர் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கனடா பிரதமர் ட்ரூடோ கூறுகை யில், ”இந்திய அரசின் துாதரக விதி முறைகளை மீறிய இந்த செயலால், இரு நாடுகளையும் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
மத்திய அரசு பதிலடி!
நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:துாதரக அதிகாரிகளின் எண்ணிக்கையில் இந்தியா – கனடா இடையே சமத்துவத்தை பேண வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை, சர்வதேச விதிமீறலாக சித்தரிக்கும் முயற்சியை நிராகரிக்கிறோம். கனடாவின் இந்திய துாதரகத்தில் உள்ள எங்கள் அதிகாரிகளின் எண்ணிக்கையை விட, இங்குள்ள கனடா துாதரக அதிகாரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, சமத்துவத்தை பேண வேண்டிய தேவையை உருவாக்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்