முற்றிய மூடநம்பிக்கை… 15 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற குடும்ப உறுப்பினர்கள்; குஜராத் `திகில்'

குஜராத்தின் ஜாம்நகரில், தங்களுடைய 15 வயது சகோதரி உயிரோடிருந்தால் குடும்ப உறுப்பினர் அகால மரணமடைவார் என்ற மூடநம்பிக்கையில், சகோதரனும் சகோதரியும் சேர்ந்து அந்தச் சிறுமியைக் கொடூரமான முறையில் கொலைசெய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவமானது, ஜாம்நகர் மாவட்டத்தின் த்ரோல் தாலுகாவிலுள்ள ஹஜம்சோரா கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு (அக்டோபர் 16 ) நடந்திருக்கிறது.

கொலை

இதில் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் பெயர் சாரதா தாட்வி. இவருக்கு ராகேஷ் என்ற சகோதரனும், சவிதா என்ற மூத்த சகோதரியும் இருக்கின்றனர். இவர்களின் குடும்பமானது, தாஹோட்டிலுள்ள மாண்டவ் கிராமத்தைச் சேர்ந்தது. மேலும், இந்தக் குடும்பத்தில் தீவிர மதவாதியாக அறியப்படும் தந்தை, நிறைய சடங்குகளைச் செய்பவர் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், சாரதா தாட்வி கொல்லப்பட்ட அடுத்த நாள், ராகேஷ், அவரின் மூத்த சகோதரி சவிதா ஆகியோரின் நடவடிக்கைகளைப் பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு அவர்களின்மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் அக்கம் பக்கத்தினர் இதனைக் கூற, அவரும் இது பற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இறந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ், சவிதா ஆகியோரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் என்றும், நவராத்திரியின் முதல் நாளிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வந்திருப்பதும் தெரியவந்தது.

கைது

பின்னர் சம்பவம் பற்றி பேசிய த்ரோல் காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரி பிரகாஷ் பனாரா, “சாரதாவும், சவிதாவும் சாமுண்டா தெய்வத்தினை வணங்கிக் கொண்டிருந்தபோது, சாரதாவின் பாவச் செயல்கள் இப்போது தீவிரமடைந்து வருவதாகவும், அவள் உயிரோடு இருந்தால் குடும்பத்தில் அகால மரணம் ஏற்படும் என்றும் சவிதா பேசத் தொடங்கினாள். இதைக் கேட்ட ராகேஷ், சவிதாவுடன் சேர்ந்து சாரதாவின் ஆடைகளைக் களைந்து அவளைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, இருவரும் தங்களுடைய சகோதரி என்றுகூட பாராமல், சிறுமியைக் கத்தியால் பலமுறை குத்தினர்” என்று கூறினார்.

மேலும், ராகேஷும், சவிதாவும் சாரதாவை அறையிலிருந்து முற்றத்துக்கு அழைத்துச் சென்று இரும்புக் கட்டிலிலும், சுவரிலும் பலமுறை தலையை இடித்து இரக்கமில்லாமல் கொலைசெய்தது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மூடநம்பிக்கை

நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னும் மதத்தினையும், மூடநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு வாழும் மக்கள் இருந்து கொண்டுதான் வருகிறார்கள். இருப்பினும், இளம் வயதினரும்கூட மதத்துக்கும், மூடநம்பிக்கைக்கும் அடிமையாகியிருக்கின்றனர் என்பது வருத்தத்துக்குரியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.