Doctor Vikatan: என் வயது 50. மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் கண்கள் செருகி உறக்கம் வருகிறது. வேலை செய்யும் இடத்தில் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் என்ன… தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

உங்களுடைய வயது இந்தப் பிரச்னைக்கான காரணமாக இருக்காது. சாப்பிட்ட உடன் சிறிது நேரம் தூங்கிப் பழகியிருப்பீர்கள். இரவு நேரத்தில் முழுமையாகத் தூங்க முடியாததன் விளைவாகவும் இருக்கலாம். மூன்றாவதாக, வயிறு முட்ட சாப்பிடுவதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
நீங்கள் காலையில் 8.30 மணிவாக்கில் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம். 11.30 மணி வாக்கில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம். சர்க்கரைநோயாளிகள் பழங்கள் தவிர்த்து வெறும் காய்கறிகள் மட்டும் சாப்பிடலாம். பச்சைக் காய்கறிகள் சாப்பிடப் பிடிக்காதவர்கள், காய்கறிகள் சேர்த்துச் செய்த பொரியல், கூட்டு சாப்பிடலாம். இதன் மூலம் மதிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும்.

உடல் எடை அதிகமுள்ளோர், சோறு, இட்லி, தோசை போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல், பாதி அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு பாதி அளவு காய்கறிகள், கீரை சாப்பிடுவதுதான் சரியானது. அப்படியும் தூக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை என்றால், சாப்பிட்டு முடித்ததும் குளிர்ச்சியான இடத்தில் சிறிது நேரம் நடக்கலாம்.
சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்யக்கூடாது என்பதுதான் சரி. ஆனால் தூக்கத்தைத் தவிர்ப்பதற்காக சில நிமிடங்கள் மட்டும் இப்படி நடந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பின்பற்றலாம். அதன் பிறகு பகலில் தூங்கும் வழக்கம் தானாக மாறிவிடும். இரவிலும் தூக்கம் தடைப்படாது. ஆழ்ந்து உறங்குவீர்கள்.

காலை உணவை சாப்பிட்டுவிட்டு, இடையில் எதையும் சாப்பிடாமல், நேரடியாக மதியத்துக்கு கார்போஹைட்ரேட் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பகலில் நிச்சயம் தூக்கம் வரும். உங்களுடைய சொந்த அலுவலகம், வீடு என்றால் சாப்பிட்டதும் சிறிது நேரம் தூங்கலாம், தவறில்லை. ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் ‘கேஸ்ட்ரோ ஈஸோபெகல் ரெஃப்ளெக்ஸ்’ (Gastroesophageal reflux disease -GERD) என்ற பிரச்னை வரலாம். அதன் விளைவாக சாப்பிட்டதும் உணவுக்குழாயில் ஏறி, சளி, இருமலை ஏற்படலாம். இரைப்பை புண்ணாகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.