எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் திமுக பெரும் விலை கொடுக்க  வேண்டியிருக்கும் – அண்ணாமலை

தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை சாடியிருக்கிறார்.

சென்னையை அடுத்த பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை, இரவோடு இரவாக போலீஸார் அகற்றினர். இதையடுத்து, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளைத் தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப்போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக-வைச் சகோதர, சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொது மக்களை ஏய்த்துப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் .

பத்தாயிரமாவது கொடிக் கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரின் முன்னிலையில் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.