சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ‘விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரும் இத்திட்டம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பு 3 கட்ட பரிசோதனைகளை நடத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக ஆளில்லா மாதிரி விண்கலம் இன்றுவிண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தின் (Crew Module) மாதிரி கலம், தரையில் இருந்து 17 கி.மீ. தூரம் வரை அனுப்பப்பட்டு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரப்படும். இதில் ஏதேனும் ஒருசூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தால், அதில் உள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முதல்கட்ட சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒற்றை பூஸ்டர் (விகாஸ் இயந்திரம்) கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் ஆளில்லாத விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான 13 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.