ககன்யான் விண்கலத்தை ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு – இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை இன்று காலை 8 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை தெரிவித்தார்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது. வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலையில், விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அப்போதும் மேலே எழும்புவதில் சிக்கல் இருந்ததால், நேரத்தை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், 5 நிமிடங்களுக்கு முன்பாக, இந்த சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இஸ்ரோ முடிவெடுத்து, அதனை அறிவித்துள்ளது.

“விண்கலம் மேலே எழும்புவது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயன்றும் அது மேலே எழும்பாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.