கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கலாம்: தேவ கவுடா

பெங்களூரு: கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா சனிக்கிழமை தெரவித்துள்ளார். மஜத- பாஜகவுடன் கூட்டணி குறித்த கேரள முதல்வர் பினராய் விஜயன் கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவுடனான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணியை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளதாக மதஜ தலைவர் தேவ கவுடா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து வெளியான சிலமணி நேரங்களுக்குள் அதனை கேரள முதல்வர் மறுத்திருந்தார். இதுகுறித்த தனது எக்ஸ் தள பதிவில், ஹெச்.டி தேவகவுடாவின் சமீபத்திய அறிக்கையை பார்த்து நான் முற்றிலும் வியப்படைந்துள்ளேன். மஜத- பாஜக கூட்டணியை நான் ஆதரிப்பேன் என்ற எண்ணம் ஒரு மாயையான கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. தேவ கவுடா போன்ற ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதி இதுபோன்ற பொய்யைக் கூறுவது வெட்கக் கேடானது. சங்க் பரிவாரத்துக்கு எதிரான போரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகவும் நிலையாகவும் களமாடி வருகிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எப்போதும் தளர்ச்சி இல்லை” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல் தலைவருமான தேவ கவுடா தனது எக்ஸ் பக்கத்தில், “சிபிஎம் குறித்த எனது அறிக்கையில் சில குழம்பம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எனது கம்யூனிஸ்ட் தோழர்கள் நான் கூறியதை அல்லது அதன் அர்த்தத்தையோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மஜத- பாஜக கூட்டணியை கேரள சிபிஎம் கட்சி ஆதரிக்கிறது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணிக்கு பின்னர், கர்நாடகாவுக்கு வெளியே உள்ள எங்கள் கட்சி உள்ள மாநிலங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. கேரளாவில் எங்கள் கட்சி அங்குள்ள இடதுசாரி அரசாங்கத்துடன் ஒத்துப்போகிறது என்று மட்டுமே தெரிவித்தேன். சிபிஎம் தலைவர்கள் தங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது விளக்கமளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று தெரவித்திருக்கிறார்.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சமீபத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. மஜத தலைமையின் இந்த முடிவுக்கு அக்கட்சியின் பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த மஜதவின் கர்நாடக‌ மாநிலத் தலைவர் சி.எம். இப்ராஹிமை அந்தப் பதவியில் நீக்கி ம‌ஜத தேசிய தலைவர் தேவகவுடா உத்தரவிட்டார். மேலும், தனது மகனும் கர்நாடாகாவின் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை மாநிலத் தலைவராக நியமித்தார்.

இதனிடையே, தமிழகம், கேரளா, மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மஜத கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவுடனான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தேவ கவுடா வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த பினராயி விஜயன், “மஜத தலைவரின் அறிக்கை உண்மைக்குபுறம்பானது. அவர் தனது மகனை முதல்வராக்குவதற்காக தனது கட்சிக் கொள்கைக்கு விரோதமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.