சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்: அரசிதழில் வெளியிட்டது புதுச்சேரி அரசு  

புதுச்சேரி: சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அதனை அரசிதழில் புதுச்சேரி அரசு வெளியிட்டது.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்தார். இவரிடம் போக்குவரத்து, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலைப் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்து வந்தன.

இரண்டரை ஆண்டுகள் அமைச்சர் பதவியில் நீடித்த சந்திரபிரியங்கா கடந்த 10-ம் தேதியன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் சாதி ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஆனால் அவர் நீக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அவரது செயல்பாடு சரியில்லாததால் முதல்வர் ரங்கசாமி 6 மாதத்துக்கு முன்பாகவே நீக்கம் செய்து கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் வழியே குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும். இதனால் கடந்த 10 நாட்களாக சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என்ற கேள்வியும், குழப்பமும் நீடித்து கொண்டிருந்தது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்தக் கேள்வியை முன்வைத்து கேள்வி எழுப்பி வந்தனர். உள்துறை அமைச்சர் தலை நகரில் இல்லாததால் பதவி நீக்கத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதே வேளையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே செயல்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் என்று குறிப்பிட்டு செய்திகளை சந்திரபிரியங்கா வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்று கொண்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையில், இன்று புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், “சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு ஒப்புதல் பெற காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும், பாஜக அவரது ராஜினாமாவை தடுக்க முயற்சித்தது என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

அமைச்சர் பதவியில் இருந்து யாரை வேண்டுமானாலும் நீக்கவும், சேர்க்கவும் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. சந்திரபிரியங்காவின் செயல்பாடுகள் 6 மாத காலமாக சரியில்லை என்ற காரணத்தினால் முதல்வர் அவரை நீக்கனார்.நீக்கிய பிறகு சந்திரபிரியங்கா ராஜினாமா என்ற பெயரில் ஒரு கடிதத்தை முதல்வரிடம் வழங்கியதோடு மட்டுமின்றி நேரடியாக உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியதன் விளைவாக காலதாமதம் ஏற்பட்டது.

யூனியன் பிரதேசம் என்பதால் முறையாக ராஜினாமா கடிதம் முதல்வரால் பெறப்பட்டு, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அந்தக் கடிதம் சென்றிருக்க வேண்டும். ஆனால் நேரடியாகவே மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியதன் விளைவாக சிறு குழப்பம் நிலவியது.ஆளுநரின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்ட கடிதமும், சந்திரபிரியங்கா நேரடியாக அனுப்பிய கடிதமும் என இரண்டு கடிதங்கள் சென்றதுதான் இந்த குழப்பத்துக்குக் காரணம். இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து சந்திரபிரியங்காவை முதல்வர் நீக்கினார் என்ற விளக்கத்தை நானும், ஆளுநரும் விளக்கிய பிறகு தற்போது அவர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.” என்றார்.

இதனிடையே புதுச்சேரியில் முதல்வர் உட்பட 6 அமைச்சர்களில் ஒரு அமைச்சர் பதவி தற்போது காலியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.