திருப்பத்தூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் தீபா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, ‘‘பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு உரம், யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை வழங்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் யூரியா, ஜிப்சம் தடைஇல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
படம். ந.சரவணன்.
வனவிலங்குகளால் சேதமாகும் விளை நிலங்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல, பருத்தியில் இருந்து விதைகளை பிரித்து எடுக்கும் ஆலை ஒன்றையும் அமைக்க வேண்டும்.
வாணியம்பாடி பகுதியில் உள்ள நாகல் ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, உதயேந்திரம் ஏரி, கொடையாஞ்சி ஏரி, ஆம்பூர் பகுதியில் உள்ள விண்ணமங்கலம் ஏரி, மின்னூர் ஏரிகளில் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். வரும் நவ. 17-ம் தேதி கரும்பு ஆலைகளில் அரவை தொடங்க இருப்பதால் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியின் வழியாக கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ‘விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், நெக்னாமலையில் சாலை வசதியை ஏற்படுத்த ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விரைவான நடவடிக்கை எடுத்ததற்கும், கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்தமைக்காக விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.