"மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்" – உதயநிதி

மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து பேசிய அவர், “இந்த நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இருந்தாலும், இதை மாபெரும் மக்கள் இயக்கமாகதான் முன்னெடுத்து செல்லவேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் இடுகின்ற இந்த ஒவ்வொரு கையெழுத்தும் தமிழ்நாட்டு கல்வி உரிமைப் போராட்டத்தின் உயிரெழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும். பிஜி நீட் சேர, 0 பெர்சண்டைல் எடுத்தால் போதும். இதுதான் நீட்டின் நிலை. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. (முட்டையை கையில் எடுத்து காண்பித்தார்)

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இன்னொரு மரணம் நிகழக் கூடாது. ஒன்றிய அரசு நமது மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து அலட்சியம் செய்து கொண்டிருந்தால், அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க போராட்டத்தைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் விலக்குக்காகவும் அதிமுக இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதுதான் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்பொழுது நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாகச் சொல்கிறீர்கள். அதிமுக-வுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதிமுக-வினரும் வாருங்கள். நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம். அனைத்து இயக்கத்தினரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். டிஜிட்டல் முறையிலும் அஞ்சல் மூலமாகவும், கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கலாம். நீட் விலக்கு திமுகவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.