பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பெண், 35 ஆண்டுகள் காத்திருந்து இந்திய குடியுரிமை பெற்றுஉள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு, பத்திரிப்பாலாவை சேர்ந்த கோவிந்தன், -ஸ்ரீதேவி தம்பதியின் இரண்டாவது மகள் ராதா, 59. தென் கிழக்காசிய நாடான மலேஷியாவில் பிறந்த இவர், கடந்த, 35 ஆண்டுகளாக இந்திய குடியுரிமை ஆவணத்திற்கு காத்திருந்தார். இந்நிலையில், நேற்று பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா, ராதாவுக்கு குடியுரிமை ஆவணம் வழங்கினார்.
பாஸ்போர்ட்
இதுகுறித்து ராதா கூறியதாவது:
வேலை நிமித்தமாக தந்தை மலேஷியாவில் இருந்த போது நான் பிறந்தேன்.
அதன்பின், தாயுடன் கேரள மாநிலம் திரும்பி, பாலக்காடு, பத்திரிப்பால மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன்.
அதன்பின், வேலை தேடி பாஸ்போர்ட் எடுத்து, 1980ல் மலேஷியாவுக்கு சென்றேன். ஓராண்டு கழித்து திரும்பிய பின், கஞ்சிக்கோடு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது.
அதன்பின், மீண்டும் மலேஷியா செல்ல விரும்பினேன். பாஸ்போர்ட் புதுப்பிக்க முயன்ற போது, குடியுரிமை சிக்கல் ஏற்பட்டது.
மலேஷியாவின் குடியுரிமை உள்ள எனக்கு, இந்திய குடியுரிமை பெற விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை இந்தியாவில் குடியிருக்க மலேஷியா உயர் ஆணையரின் அனுமதி வேண்டும் என்றும் மத்திய உள்துறை அறிவித்தது.
தொடர்ந்து, 1988ல் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பம் அளித்தேன்.
கலெக்டர் அலுவலகம் முதல், மத்திய உள்துறை அமைச்சக அலுவலகம் வரை ஏறி இறங்கினேன்.
ஆவணம்
மத்திய அமைச்சர்களிடம் விண்ணப்பம் அளித்தேன். தற்போது, பாலக்காடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குடியுரிமை ஆவணம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்